

சென்னை: அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் சென்னை ஐஐடியில் இணைய பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. அடிப்படை ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும் அதன்மூலம் புதிய கண்டு பிடிப்புகளை நிகழ்த்தவும், பிளாக் செயின், செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கான பாதுகாப்பு, கிரிப்டோகிராபி, குவாண்டம் பாதுகாப்பு, இன்டர்நெட் ஆப் திங்க் போன்ற வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் சென்னை ஐஐடியில் இணைய பாதுகாப்பு மையம்நிறுவப்பட்டுள்ளது.
இந்த மையத்தை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி முன்னிலையில் அம்மையத்தின் ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர் ஸ்வேதா அகர்வால், பேராசிரியர் செஸ்டர் ரெபைரோ, பேராசிரியர் ஜான் அகஸ்டின் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநர் காமகோடி பேசும்போது, “இணைய அச்சுறுத்தல்கள் வெறும் நிதி இழப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி சிக்கலான தொழில்நுட்ப கட்டமைப்புகளுக்கும் சேதம் விளைவிக்கும். இணைய பாதுகாப்பு சாதனங்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருவதால் நாட்டின் பாதுகாப்பும் முக்கியம். அந்த வகையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இணைய பாதுகாப்பு மையம் வரப்பிரசாதமாக இருக்கும்" என்றார்.