

சென்னை: மியாசி அகாடெமி ஆப் ஆர்க்கிடெக்சர் கல்லூரியின் பட்டம் வழங்கும் விழாவில் மொத்தம் 187 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மியாசி அகாடெமி ஆப் ஆர்க்கிடெக்சர் கல்லூரியின் 20-வது பட்டம் வழங்கும் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதன் வளாக கலையரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமை வகித்த தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கத்தின் (மியாசி) தலைவர் இம்தியாஸ் பாஷா சாகேப் தலைமை உரையாற்றினார்.
இதில் 162 இளநிலை, 25 முதுநிலை என மொத்தம் 187 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அதில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களும் அளிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கே.எஸ்.எம் ஆர்க்கிடெக்சர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீராம் கணபதி பேசும்போது, “மாணவர்கள் கட்டமைக்கப்பட்ட சூழலை வடிவமைப்பதில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். நிலையான மற்றும் மலிவு விலையில் கட்டிடங்களை உருவாக்குவதில் பொறியாளர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். மேலும், சுற்றுச்சூழலுக்கேற்ப உள்ளூர் வளங்கள் மற்றும் கலாச்சாரத்தை பயன்படுத்தி நாட்டின் கட்டிடக்கலையை உயரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.
கல்லூரியின் 2023-ம் ஆண்டு தேர்ச்சி விகிதமாக, இளநிலையில் 99 சதவீதமும், முதுநிலையில் 100 சதவீதமும் உள்ளது. இதுதவிர பட்டம் பெற்ற மாணவர்களில் 13 பேர் அண்ணா பல்கலைக்கழக அளவிலான தரவரிசையில் முதல் 30 இடங்களை பிடித்துள்ளனர்.
இந்நிகழ்வில் மியாசி அமைப்பின் கவுரவச் செயலாளர் எலியாஸ் சைட், மியாசி அகாடெமி ஆப் ஆர்க்கிடெக்சர் கல்லூரியின் துணைத் தலைவர் ரபீக் அகமது, ஒருங்கிணைப்பாளர் நாசர் முகமது, முதல்வர் எம்.ஆர்.முகமது காலித், டீன் மோன்சிங் டி தேவதாஸ், துறைத் தலைவர்கள் எஸ்.கேசவலு, நவரா, பிரியா சசிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.