Published : 05 Jun 2018 11:29 am

Updated : 05 Jun 2018 11:34 am

 

Published : 05 Jun 2018 11:29 AM
Last Updated : 05 Jun 2018 11:34 AM

ஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல் நாள்: மரம் நடுவதுகூடப் பிரச்சாரம்தான்!

5

ஜூன் 5: உலகச் சுற்றுச்சூழல் நாள்

மேற்கத்திய நாடுகளில் ‘சூழலியல் பெண்ணியம்’ என்ற கோட்பாடு 80-களில், 90-களில் உருவானது. ஆனால், அதற்கு முன்பே, அந்தக் கோட்பாடு தமிழர்களிடையே இருந்திருக்கிறது. அதற்கான சான்றுகள் சங்கப் பாடல்கள், நாட்டார் வழக்காற்று கதைகள், வாய்மொழி வரலாறுகள் போன்றவற்றில் தென்படுகின்றன.

ஆனால், காலம் செல்லச் செல்ல, கதை சொல்லும் மரபு தமிழர்களிடையே வழக்கொழிந்து வர, இன்று மக்கள் இயற்கையிடம் இருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டார்கள். இன்று நாம் சந்திக்கிற பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளுக்கு அந்தக் கதைகளை நாம் மறந்தது மிக முக்கியமான காரணம்.

கதைகள் வழியாக, தமிழர்களிடையே இருந்த சுற்றுச்சூழல் கரிசனம், பெண்களுக்கும் இயற்கைப் பாதுகாப்புக்குமான தொடர்பு, இயற்கையைப் பாதுகாப்பதில் பெண்கள் பயன்படுத்துகிற சொல்லாடல்களின் தாக்கம் போன்றவை குறித்து ‘நேச்சர், கல்ச்சர் அண்ட் ஜெண்டர்’ எனும் புத்தகத்தில் ஆவணப்படுத்தி இருக்கிறார் பேராசிரியர் மேரி வித்யா பொற்செல்வி. சென்னை லயோலா கல்லூரியில், ஆங்கில மொழித் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது புத்தகத்தை, ரவுட்லெட்ஜ் பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.

பெண்ணுக்கும் மரத்துக்குமான உறவு, பெண்ணுக்கும் பறவைகளுக்குமான உறவு, பெண்ணுக்கும் நீருக்குமான உறவு, பெண்ணுக்கும் உணவுக்குமான உறவு, பெண்ணுக்கும் மொழிக்குமான உறவு என 12 மையக் கருத்துகளின் கீழ், அந்தக் கதைகள் தொகுக்கப்பட்டு, அதன் வழியே சூழல் பாதுகாப்பில், நம் முன்னோர்கள் எப்படியான விழிப்புணர்வைக் கொண்டிருந்தார்கள் என்பதை ஆழமாகப் பேசுகிறது இந்தப் புத்தகம். உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி, மேரி வித்யா பொற்செல்வியைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...

ஆளுமைகளால் பெற்ற ஊக்கம்

“என்னுடைய சொந்த ஊர் கொடைக்கானல். இயற்கையை ரசித்தும், கதைகளைக் கேட்டும் வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவள் நான். எங்கள் வீட்டுப் பக்கத்தில், விறகு பொறுக்க வரும் பழங்குடிப் பெண்களின் அரட்டையைக் கவனிப்பது வழக்கம். அப்போது, அவர்கள் இயற்கையுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். என் பாட்டியும் அம்மாவும் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை அவர்களே பயிர் செய்துகொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.

இதற்கு இடையே, அன்னை தெரசா, வந்தனா சிவா, நம்மாழ்வார், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், மேதா பட்கர் போன்ற பல ஆளுமைகளை என் வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் சந்தித்திருக்கிறேன். அவர்களால் பெற்ற ஊக்கத்தால்தான், என்னுடைய முனைவர் பட்ட ஆய்வை, சுற்றுச்சூழல் தொடர்பானதாகத் தேர்ந்தெடுத்தேன். அப்போது, சூழலியல் பெண்ணியம் சார்ந்த 6 மையக் கருத்துகளை உருவாக்கினேன். அண்மையில், இந்தப் புத்தகம் எழுதுவதற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, மேலும் 6 கருத்துகளை உருவாக்கினேன். இந்த 12 கருத்துகளின் கீழ், நம்முடைய நாட்டார் கதைகள், வாய்மொழிக் கதைகள் ஆகியவற்றைத் தொகுத்திருக்கிறேன்” என்பவர், ‘பெண்கள் எப்போதும் மவுனமாக இருந்ததில்லை. ஆனால், மவுனமாக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகள்தாம், கதைகளாகவும் பாடல்களாகவும் மாறின’ என்கிறார்.

எளியவர்களின் அனுபவ அறிவு

“இந்தக் கதைகளைச் சேகரிப்பதற்காக, தமிழகத்தின் பல பகுதிகளுக்கு நான் பயணித்தேன். ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு பாட்டியுடன் பேசும்போதும், 50 புத்தகங்களைப் படித்ததற்கு நிகரான அறிவு, அனுபவங்கள் கிடைக்கும். பறவைகளின் மொழியைப் புரிந்துகொண்ட சிறுமி ஒருத்தியைப் பற்றிய நாட்டார் கதை நம்மிடையே உண்டு. மதுரை, கருப்பாயூரணி கிராமத்தில் அழகுப்பிள்ளையுடன் பேசும்போது, எனக்கு அந்தக் கதைதான் நினைவுக்கு வந்தது. ‘என்னுடைய பொழுதுபோக்கே நான் வளர்க்கும் செடி, கொடிகள், மாடுகள், ஆடுகளுடன் பேசுவதுதான்’ என்று சொன்னார் அவர்.

திண்டுக்கல்லில் உள்ள ஏ.வெள்ளோடு எனும் கிராமத்திலிருக்கும் இன்னாஸியம்மா, முருங்கைக்கீரையைப் பயன்படுத்தி எனக்கு ரசம் வைக்கக் கற்றுக்கொடுத்தார். தவிர, ‘தீனீச்சிப் பச்சிலை’ எனும் மூலிகையைப் பற்றியும் பல தகவல்களைச் சொன்னார். இப்படிப் பல அனுபவங்கள்!” என்றவர், குழந்தைகளுக்குக் கதை சொல்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

‘மேலே’ உண்டு தீர்வு!

“முன்பெல்லாம், நமது பாட்டிகள், அம்மாக்கள், குழந்தைகளுக்குச் சோறு ஊட்டும்போது, அந்தச் சோறு எங்கிருந்து வந்தது என்கிற விஷயத்தையும் சேர்த்தே கதையாகச் சொல்லியிருக்கிறார்கள்.” இதை ஆங்கிலத்தில் ‘டீப் ஈக்காலஜி’ என்கிறார்கள். அதாவது, மனிதர்கள் தனி, தாவரங்கள் தனி, பறவைகள் தனி, விலங்குகள் தனி, என்றில்லாமல், எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்கிற தத்துவம்தான் அது.

நம்முடைய பாட்டிகளுக்கும், அம்மாக்களுக்கும் ‘சூழலியல் பெண்ணியம்’, ‘டீப் ஈக்காலஜி’ போன்ற வார்த்தைகள் வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இயற்கை மீதான கரிசனம், இயல்பாகவே அவர்களிடம் இருந்தது. எறும்புகளுக்கு உணவாகும் என்று அரிசி மாவால் கோலம் போடுவதுகூட அப்படியான கரிசனம்தான்!” என்றவர், ‘இந்தக் கதைகளை மீட்டெடுத்து, குழந்தைகளுக்குச் சொல்வதன் மூலம், அவர்களிடையே இயற்கை மீதும், சக பாலினத்தவர் மீதும் மரியாதை ஏற்படும்’ என்கிறார்.

“இன்றைக்கு இருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குச் சூழலியல் பெண்ணியம் என்ன தீர்வு வைத்திருக்கிறது?’ என்று கேட்டபோது, “1905-ல் ரொக்கையா சகாவத் ஹுசைன் எனும் பெண்மணி, ‘சுல்தானாஸ் ட்ரீம்’ எனும் ‘உடோப்பியன் நாவல்’ ஒன்றை எழுதினார். அதில் சூரிய ஒளி மின்சாரம், மழை நீர் சேகரிப்பு போன்றவை குறித்து எழுதி இருந்தார். அன்று அதைப் படித்த மக்கள் சிரித்தார்கள். ஆனால், இன்று அவை நிஜமாகி இருக்கின்றன. மின்சாரத்துக்காகச் சுரங்கம் தோண்டுதல் போன்ற சூழலியலுக்கு எதிரான விஷயங்களைக் கைவிட்டு, வானத்தைப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது!” என்கிறார் மேரி.

செயலே சிறந்த பிரச்சாரம்

“ஆணாதிக்கச் சமூகமாக இருக்கிற இந்த நாட்டில், சுற்றுச்சூழல் பற்றியும், சுற்றுச்சூழலுக்காகவும் பெண்கள் பேசியிருக்கிறார்கள். என்ன, அவர்கள், மேடை போட்டு எதையும் பிரச்சாரம் செய்யவில்லை. தங்கள் செயல்பாடுகள் மூலமாக அதை மற்றவர்களுக்கு உணர்த்தினார்கள்.

மரத்தைக் கட்டிப்பிடித்துப் போராடிய ‘சிப்கோ’ பெண்கள் போராட்டம், அப்படியான ஒரு பிரச்சாரம்தான். மரத்தை வெட்டுவதால் அவர்கள் மரத்தை அணைக்கவில்லை. மரத்தை, தங்களில் ஒருத்தியாகப் பார்த்தார்கள் அந்தப் பெண்கள். அதனால்தான் மரத்தை அணைத்துக்கொண்டார்கள். மரங்களைத் தன் குழந்தைகளாக நினைத்து வளர்த்து வரும் திம்மக்கா போன்றவர்கள் எதையும் பிரச்சாரம் செய்யசெய்யவில்லை. அவர்களது செயலே பிரச்சாரம்தான். ஆம், மரம் நடுவதுகூட சூழலியல் பிரச்சாரம்தான்!” என்று புன்னகைத்து விடைகொடுத்த மேரி வித்யா பொற்சொல்வி, கடைசியாக இப்படிச் சொன்னார்: “சூழலியல் பெண்ணியம், இப்படித்தான். எப்போதும் எளிமையை உயர்த்திப் பிடிக்கும்!”

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author