

திண்டுக்கல்: உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இடம் பெற்றுள்னர்.
உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலை, அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டுபல்கலைக்கழக பேராசிரியர் ஜான்லொன்னிடிஸ் மற்றும் அவரது குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் பல்வேறுநாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். உலகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் இருந்து 3,500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இதில் இடம் பிடித்துள்ளனர்.
2023-ம் ஆண்டுக்கான பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக கணிதவியல் துறை பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியம், வேதியியல்பேராசிரியர் எஸ்.மீனாட்சி, இயற்பியல் பேராசிரியர் கே.மாரிமுத்து ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், கடந்த ஆண்டு மறைந்த வேதியியல் பேராசிரியர் ஆபிரகாம் ஜானும் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அவர் நானோதொழில்நுட்பம் கொண்டு, உயிரி வேதியியல் காரணிகளைக் கண்டறியும் உணர்விகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வந்தார். இந்த உணர்விகள் சிறப்பான செயல்பாடு மற்றும் விலை மலிவான உணர்விகளாக உள்ளன.
பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியம், தெளிவற்ற தர்க்க அணுகுமுறைகளைப் பயன்படுத்தி, தரம்குறைந்த படங்களை உயர்தர படமாக மாற்றுதல், கிரிப்டோகிராபி மற்றும் செயலாக்கத் தொழில்நுட்பம் மூலம் நோயாளியின் மூளையில் ஏற்படும் அதிர்ச்சியைக் கண்டறியும் முறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
பேராசிரியர் எஸ்.மீனாட்சி,கழிவுநீரில் இருந்து நச்சுத்தன்மையுள்ள ஃபுளூரைடு, காரியம், குரோமியம், பாதரசம் மற்றும் நச்சுகளை உறிஞ்சுதல் மூலமாக நீக்கும்முறைகளை உருவாக்குதல் மற்றும் பேராசிரியர் கே.மாரிமுத்து, அரிதான பூமியின் தாதுக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கண்ணாடிகள் மூலம் வெள்ளை ஒளி மற்றும் லேசர் ஒளி உமிழ்வதற்கான ஆய்வு மற்றும் அபாயகரக் கதிர்வீச்சை தடுப்பதற்கான கண்ணாடிகள் உருவாக்கும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து 5-வது முறையாக பாலசுப்பிரமணியம், மீனாட்சி, மாரிமுத்து ஆகியோர் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.