இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்ற TNPSC அவகாசம்

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்ற TNPSC அவகாசம்
Updated on
1 min read

சென்னை: இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் தேர்வில் விடுபட்ட சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அக்டோபர் 3-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் நேரடி நியமன தேர்வில் (குருப்-1-பி) விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்திருந்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் சில விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களை முழுமையாகவோ, சரியாகவோ பதிவேற்றம் செய்யாமல் இருப்பது கண்டறிடப்பட்டுள்ளது.

இத்தகைய விண்ணப்பதாரர்கள் குறைபாடுகளை சரிசெய்ய இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்கள் விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை அக்டோபர் 3-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை பதிவேற்றம் செய்யலாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அவர்கள் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்ட சான்றிதழ்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் ஒருமுறை பதிவு (ஓடிஆர்) வாயிலாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் கோரிக்கை மற்றும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in