

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி 90-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தேசிய அளவில் நடத்தப்படும் விநாடி-வினா போட்டியில் மாணவர்களை பங்கேற்கச் செய்யுமாறு கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 90-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் அந்த வங்கி பல்வேறு தொடர் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுசெய்துள்ளது.
அதன்ஒருபகுதியாக நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேசிய அளவிலான விநாடி வினா போட்டியை நடத்தவுள்ளது. இதில்பொது அறிவு, வரலாறு, பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் குறித்தவினாக்கள் இடம்பெறும். இந்தி,ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் போட்டி நடைபெறும்.
இதற்கான தகுதி சுற்றில் வெற்றிபெறும் கல்லூரிகள் மண்டல போட்டிக்குத் தகுதி பெறுவர். இதையடுத்து மாநில, தேசிய அளவில் விநாடி-வினா நடைபெறும். மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும். இறுதியாக தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம், 2-வது பரிசாக ரூ.8 லட்சம், 3-ம் பரிசாக ரூ.6 லட்சம் வழங்கப்படும்.
பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மாநில, மண்டல போட்டிகள் அக்டோபர், நவம்பர் மாதங்களிலும், இறுதிப் போட்டி டிசம்பரிலும் நடைபெறும்.
தகுதிச் சுற்று இணையவழியி லும், மாநில, மண்டல, தேசிய போட்டிகள் நேரடி முறையிலும் நடத்தப்படும். போட்டிக்கான பதிவு உள்ளிட்ட கூடுதல் தகவல்களை இந்தியரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இந்த விநாடி-வினா குறித்து கல்லூரிகளில் பயிலும் அனைத்துமாணவர்களுக்கும் தெரியப்படுத்தி, அதிக மாணவர்கள் பங்கேற்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.