

சென்னை: கால்நடை மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர் ஒதுக்கீட்டில் 50 பேருக்கு கல்லூரிஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் தொடங்கியது.
முதல் நாளில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில், மொத்தமுள்ள 51 இடங்களில் 25 இடங்கள் நிரம்பின. இந்நிலையில் 2-வது நாளான நேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதஉள்ஒதுக்கீட்டின்கீழ் உள்ள 50 இடங்களுக்கு (பிவிஎஸ்சி படிப்பு) கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இதில் கலந்துகொள்ள 180 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. மொத்தம் 81 பேர் பங்கேற்றனர். கலந்தாய்வு முடிவில் 50 பேருக்குகல்லூரி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. பிடெக் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கான (8 சீட்டுகள்) கலந்தாய்வு இன்று(வெள்ளி) நடைபெறுகிறது.
இதற்கிடையே, பொதுப்பிரிவுக்கான இணையவழி கலந்தாய்வின் முதல் சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் 7-ம் தேதிக்குள் (சனிக்கிழமை) கல்லூரி விருப்பத்தை ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும். அவர்களுக்கான கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை 11-ம் தேதி ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது..