ரூ.24 லட்சம் பரிசு; ஆர்பிஐ நடத்தும் வினாடி - வினா போட்டியில் பங்கேற்க கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: ரிசர்வ் வங்கி 90-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தேசியளவில் நடத்தப்படும் வினாடி - வினா போட்டியில் அதிகளவிலான மாணவர்களை பங்கேற்கச் செய்யுமாறு கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி உயர்கல்வி நிறுவனங்களுக்கு இன்று ( செப்.5 ) அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 90-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் அந்த வங்கி பல்வேறு தொடர் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேசிய அளவிலான வினாடி - வினா போட்டியை அறிவித்துள்ளது. இதில் பொது அறிவு, வரலாறு, பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் குறித்த வினாக்கள் இடம்பெறும். இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் போட்டி நடைபெறும். தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் கல்லூரிகள் மண்டல போட்டிக்குத் தகுதி பெறுவர்.

இதையடுத்து மாநில, தேசிய அளவில் வினாடி - வினா நடைபெறும். மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும். இறுதியாக தேசிய அளவில் வெற்றிபெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ.8 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.6 லட்சம் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

மாநில, மண்டல போட்டிகள் அக்டோபர், நவம்பர் மாதங்களிலும், இறுதிப் போட்டி டிசம்பரிலும் நடைபெறும். தகுதிச் சுற்று இணைய வழியிலும், மாநில, மண்டல, தேசிய போட்டிகள் நேரடி முறையிலும் நடத்தப்படும். போட்டிக்கான பதிவு உள்ளிட்ட கூடுதல் தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்பிஐ அறிவித்துள்ள இந்த வினாடி - வினா குறித்து கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தெரியப்படுத்தி, அதிகளவிலான மாணவர்களை பங்கேற்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in