

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நேரடியாகவும்,ஆன்லைனிலும் தொடங்கியுள்ளது. நேரடியாக நடைபெற்ற கலந்தாய்வில் சிறப்பு பிரிவில் 25 இடங்கள் நிரம்பின. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று நேரடியாக நடைபெறுகிறது.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் கால்நடை மருத்துவப் படிப்புகளான பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2024 - 25-ம் ஆண்டு கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த ஜூன் 28-ம் தேதி நிறைவடைந்தது.
பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு14,497 பேரும், பிடெக் படிப்புகளுக்கு 3,000 பேரும் என மொத்தம் 17,497 பேர் விண்ணப்பித்தனர். ஆகஸ்ட் 7-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்பு தரவரிசைப் பட்டியலில் 15 பேர் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று முன்னிலை பெற்றனர்.
இந்நிலையில், பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள்) கலந்தாய்வு நேரடியாக சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. கலந்தாய்வில் பங்கேற்குமாறு 139 பேர் அழைக்கப்பட்டதில், 74பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். சிறப்பு பிரிவில் மொத்தம் உள்ள51 இடங்களில் 25 இடங்கள் நிரப்பப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள் பிரிவில் பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்பில் 21 இடங்கள் மற்றும் பி.டெக் படிப்பில் 5 இடங்கள் என மொத்தம் 26 இடங்கள் நிரம்பவில்லை. அதனால், அந்தஇடங்கள் பொதுப் பிரிவு கலந்தாய்வுக்கு மாற்றப்படவுள்ளன. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுபள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று நேரடியாக சென்னைகால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. பி.டெக் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நாளை நேரடியாக நடைபெறுகிறது.
பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்குபொதுப்பிரிவுக்கான முதல் சுற்றுகலந்தாய்வு www.adm.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. வரும்7-ம் தேதி வரை பதிவு மற்றும் கல்லூரி வளாக விருப்பத்தை பதிவுசெய்யலாம். இடஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீட்டுக்கான கடிதம் வரும் 11-ம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.