முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித்தொகை: மாணவர்கள் விண்ணப்பிக்க ஏஐசிடிஇ அழைப்பு  

முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித்தொகை: மாணவர்கள் விண்ணப்பிக்க ஏஐசிடிஇ அழைப்பு  
Updated on
1 min read

சென்னை: முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்கள் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம்(ஏஐசிடிஇ) வெளியிட்ட அறிவிப்பு: 'நம்நாட்டில் ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கேட் அல்லது சிஇஇடி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடவியல் ஆகிய படிப்புகளில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) சேர்க்கை பெற்ற முதுநிலை மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

தகுதி பெறும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.12,400 உதவித் தொகையாக வழங்கப்படும். மாணவர்கள் ஏதேனும் ஒரு தேசிய வங்கியில் சேமிப்புக் கணக்கை தொடங்கி, அதுகுறித்த விவரங்களை விண்ணப்பிக்கும்போது தெரியப்படுத்த வேண்டும். அதேநேரத்தில், முதுநிலை படிப்பை பகுதிநேரம், தொலைதூர அடிப்படையில் படிப்பவர்கள் உதவித்தொகை பெற முடியாது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் https://-pgscholarship.aicte-india.org/ என்ற வலைதளம் வழியாக செப்டம்பர் 2 முதல் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், மாணவர்களின் விண்ணப்பங்களை அந்தந்த கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 15-ம் தேதிக்குள் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். இதுசார்ந்த கூடுதல் விவரங்களை https://www.aicte-india.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in