உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு ‘உயர்வுக்கு படி’ முகாம்; செப். 2-ல் தொடக்கம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘உயர்வுக்கு படி' சிறப்பு முகாம் அனைத்து மாவட்டங்களிலும் செப்.2-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இன்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக நிகழ் கல்வியாண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மற்றும் நிகழ் கல்வியாண்டில் கல்லூரிக்கு விண்ணப்பிக்காத பிளஸ் 2 தேர்வெழுதிய, எழுதாத, இடைநின்ற மற்றும் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற, பெறாத மாணவர்களுக்கு தகுந்த உயர்கல்வி ஆலோசனை வழங்க மே 6 முதல் மே 20-ம் தேதி அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கைக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து அடுத்த கட்டமாக உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு ‘உயர்வுக்கு படி' முகாம் செப்.2 முதல் அக்.1-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, 2022-2023, 2023-2024 ஆகிய கல்வியாண்டுகளில் பிளஸ் 2 பயின்று இதுவரை உயர்கல்வியில் சேராத மாணவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று ‘உயர்வுக்கு படி' முகாம் தொடர்பான விவரங்களையும், உயர்கல்வியில் சேருவதற்கான விழிப்புணர்வு, வழிகாட்டுதல்களையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் நேரடியாக மாணவர்களின் இல்லங்களுக்குச் சென்று உயர்கல்வி செல்லாததற்கான காரணங்களை கண்டறிந்து மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை வழங்கவுள்ளனர்.

இந்த முன்னெடுப்பில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றி மாணவர்களின் உயர்கல்வி கனவை நிறைவேற்ற உறுதுணையாக இருக்க வேண்டுமென அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in