Last Updated : 08 May, 2018 10:45 AM

 

Published : 08 May 2018 10:45 AM
Last Updated : 08 May 2018 10:45 AM

ஐ.ஏ.எஸ். வென்ற இளம் தமிழர்கள்!

ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கான தேர்வில் தமிழக அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள், வெவ்வேறு பின்னணிகளைக் கொண்டவர்கள். அவர்கள் எப்படி அந்த இடங்களைப் பிடித்தார்கள்?

ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் இந்தியக் குடிமை பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார்கள். அவ்வாறு, 2017-ம் ஆண்டில் மட்டும் 9.5 லட்சம் பேர் யூ.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வைச் சந்தித்தார்கள். முதன்மைத் தேர்வுகளைக் கடந்து நேர்முகத் தேர்வுக்குத் தேர்ச்சி பெற்றவர்கள் 2,568 பேர் மட்டுமே. அவர்களில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கு 750 ஆண்களும் 240 பெண்களும் தேர்வாகி இருக்கிறார்கள். இப்படிப் பல கட்டங்களில் நடத்தப்பட்ட கடுமையான தேர்வுகளில் வெற்றி பெற்று வாகைசூடி இருக்கும் 990 பேரில் 42 பேர் தமிழக இளைஞர்கள்.

தங்களுடைய நெடுநாள் உழைப்புக்குக் கிடைத்த வெற்றியைக் கொண்டாடிவரும் யூ.பி.எஸ்.சி. நாயகர்களில் தமிழக அளவில் முதல் மூன்று இடத்தைப் பிடித்தவர்களைச் சந்தித்தோம். ஒவ்வொருவருக்கும் சொல்லப் பல கதைகளும் வழிகாட்ட புதிய பாதைகளும் இருக்கின்றன.

என்னை மாற்றிய உரை

இந்த ஆண்டு யூ.பி.எஸ்.சி. தேர்வில் அகில இந்திய அளவில் 29-வது இடத்தைப் பிடித்து, தமிழக அளவில் முதல் இடத்தில் ஜொலிக்கிறார் கீர்த்தி வாசன். 23 வயதில் அதிலும் முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ். ஆகிவிட்டார். இத்தனைக்கும் பள்ளிப் படிப்பை முடிக்கும்வரை, சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்க வேண்டும் என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்திருக்கிறார் தர்மபுரியைச் சேர்ந்த கீர்த்தி வாசன்.

ஜெ.இ.இ. தேர்வை வென்றபோதும் அவர் எதிர்பார்த்ததுபோல சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்க முடியாமல் போனது. அதனால் திருச்சி என்.ஐ.டி.யில் சிவில் இன்ஜினீயரிங் சேர்ந்தார். கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்வுதான் அவருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. “எங்கள் கல்லூரியின் ஐம்பதாவது ஆண்டுவிழா கொண்டாட்டத்துக்கு அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.

அன்று சிவில் சர்வீசஸ் பணிகளின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி அவர் ஆற்றிய உரை, என் மீது பெரும் தாக்கத்தைச் செலுத்தியது. அதைத் தொடர்ந்து எங்கள் கல்லூரிக்கு எப்போது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வந்தாலும், சந்தித்து ஆலோசனை பெறத் தொடங்கினேன். நான்காண்டுகள் முடிந்தபோது ஐ.ஏ.எஸ். ஆவேன் என்று முடிவெடுத்து கேம்பஸ் இன்டர்வியூவில்கூடப் பங்கேற்கவில்லை” என்கிறார் கீர்த்தி வாசன்.

எனக்குப் பிடித்த பாடம்

தர்மபுரியில் பட்டுச்சேலை உற்பத்தியில் ஈடுபட்டுவரும் இவருடைய பெற்றோர், மகனின் கனவுக்கு ஒருபோதும் தடைபோடவில்லை. ஆனால், ஐ.ஏ.எஸ் ஆக முடியாவிட்டால் குடும்ப வியாபாரத்தில் இறங்கிவிட வேண்டும் என்று மட்டும் நிபந்தனை விதித்திருக்கிறார் அவருடைய தந்தை. தனக்கு விடப்பட்ட சவாலை உற்சாகமாக ஏற்றுக்கொண்டு டெல்லியில் தங்கி ஒன்பது மாதங்கள் தீவிரப் பயிற்சியில் இறங்கினார் கீர்த்தி வாசன்.

“பொறியியல் படிப்பில் உயர் மதிப்பெண் குவித்தாலும் யூ.பி.எஸ்.சி. தேர்வில் அதே பாடத்தைத் தேர்ந்தெடுப்பது விஷப் பரீட்சை என்பதால் Political Science, International Relations ஆகிய பாடப் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்தேன். எனக்கு ஐ.எஃப்.எஸ். ஆவதிலும் விருப்பம் இருந்ததால் சர்வதேச உறவுத் துறையைப் படித்தேன். ஓர் ஆண்டு முழுக்கத் தயாரிப்பு, இன்னொரு ஆண்டு முழுக்கத் தேர்வுகள், அதன் முடிவில் ஐ.ஏ.எஸ். ஆகியிருக்கிறேன். இனிச் சமூகச் சீரமைப்புப் பணியில் முழுவீச்சோடு ஈடுபடுவேன்” என்கிறார்.

செய்யக் கூடாதது...

ஓராண்டு பயிற்சியில் கற்றுக்கொண்டது என்னவென்று கேட்டால்,

“எழுத்துத் தேர்வுகளுக்கான பயிற்சியைக் காட்டிலும் நேர்முகத் தேர்வில் எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதைச் சரியாகச் சொல்லித் தந்தார்கள்” என்று அவற்றைப் பட்டியலிடுகிறார்.

1. கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் கைகளை வேகமாக அசைக்க வேண்டாம்.

2. நாம் முன்வைக்கும் கருத்துகள் மறுக்கப்படும்போது, எதிர்மறையாகப் பேசிப் புரியவைக்க முயலக் கூடாது.

3. ஐந்து நபர்கள் கொண்ட குழு நேர்முகத் தேர்வு நடத்தும். இக்கட்டான சூழலை எவ்வாறு கையாளுகிறோம் என்பதைப் பரிசோதிக்கச் சரமாரியாகக் கேள்விகள் கேட்கப்படும். அப்போது பதற்றமடைந்து கோபமாக எதிர்வினையாற்ற வேண்டாம்.

4. கேள்விக்கான பதிலை யோசித்துச் சொல்ல அவகாசம் தேவைப்பட்டால், சில நொடிகள் அமைதியாக யோசித்துவிட்டுப் பதில் சொல்லாம். அதை விடுத்து, ‘actually’, ‘like’, ‘kindof’ போன்ற வார்த்தைகளை இட்டுநிரப்ப வேண்டாம்.

தமிழிலும் வெல்லலாம்!

யூ.பி.எஸ்.சி. தேர்வில் மிகச் சிலரால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் பாடப் பிரிவுகளில் ஒன்று தமிழ் மொழிப் பாடம். அதைத் தேர்ந்தெடுத்து அகில இந்திய அளவில் 71-வது இடத்தைப் பிடித்துத் தமிழக அளவில் இரண்டாம் இடத்தில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார் மதுபாலன். ராஜபாளையத்தில் பள்ளிப் படிப்பை முடித்து ராமபுரத்தில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் பொறியியல் பட்டம் பெற்றவர்.

சிறு பிராயத்திலிருந்தே சிவில் சர்வீசஸ்தான் இலக்கு என்றாலும் இன்றைய காலச் சூழலுக்கு எதிர்நீச்சல்போடவே பொறியியல் பட்டப் படிப்பை முடித்ததாகச் சொல்கிறார். சென்னை டி.சி.எஸ்.-ல் வேலை கிடைத்தபோதும் வேண்டாம் என்று முடிவெடுத்தார். பிறகு தமிழ் மொழிப் பாடப் பிரிவில் சுயமாகத் தயாராகி இன்று ஐ.ஏ.எஸ். ஆகியிருக்கிறார்.

“எல்லோரையும் போல நானும் யூ.பி.எஸ்.சி. பயிற்சிகளுக்குப் பெயர்போன டெல்லி ஓல்டு ராஜேந்திர நகர் என்ற இடத்துக்குத்தான் முதலில் சென்றேன். ஆனால், யூ.பி.எஸ்.சி.க்கு போட்டிபோடும் லட்சக்கணக்கான இளைஞர்களை ஒரே இடத்தில் பார்த்ததும் மனஅழுத்தம் அதிகரித்தது. இத்தனை பேருக்கு மத்தியில் நம்மால் போட்டிபோட்டு ஜெயிக்க முடியுமா என்ற பயம் கவ்வியது. அதனால் இரண்டே மாதத்தில் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டேன்” என்கிறார் மதுபாலன்.

வாசிப்பு அவசியம்

ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்களில் சேராமல் தானாகவே தயாராகத் தொடங்கினார். “மற்ற பாடப் பிரிவுகளைப் போல தமிழ் இல்லை. இதில் தகவல்களைக் காட்டிலும் நம்முடைய சிந்தனை வளம், மொழிநடைக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படும். அதற்குப் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்தையும் தாண்டி வாசிப்பு அவசியம். மற்றபடி இணையத்தில் வழிகாட்டுதலும் பாடங்களும் கொட்டிக்கொள்கின்றன. அவற்றின் மூலம் தயாரானேன். சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்., நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்., மணிகண்டன் ஐ.ஆர்.ஏ.எஸ்., சுகிர்தா ஐ.ஆர்.ஏ.எஸ். உள்ளிட்டவர்களை அணுகி நேர்முகத் தேர்வுக்கு ஆலோசனை பெற்றேன்” என்கிறார் மதுபாலன்.

உங்களைப் போல எல்லோராலும் ஐ.ஏ.எஸ். ஆக முடியுமா என்றால், “வெறும் 22 வயதில், விவசாயி மகன் அல்லது கூலித் தொழிலாளி மகள் - இப்படி யாராக இருந்தாலும் இந்தியாவில் அதிஉயர்ந்த பதவியை அடைய முடியுமா என்றால், அது யூ.பி.எஸ்.சி.-யில் மட்டுமே சாத்தியம். வேறெந்த வேலைக்கும் அதன் உச்சம் தொடப் பல வருடங்கள் தேவைப்படும். இதைப் புரிந்துகொண்டுதான் நான் தயாரானேன்” என்கிறார் மதுபாலன்.

தடைகளை வென்றவர்

ஆங்கிலம் அறியாதவர், கிராமப்புறத்தில் இருந்து வந்தவர், பண வசதி இல்லாதவர், சமூகரீதியாகப் பின்தங்கியவர் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் படித்து முதலிடம் பிடித்து, இந்தியக் குடிமை பணித் தேர்விலும் ஐ.ஏ.எஸ். ஆக முடியுமா? இதில் ஏதோ ஒன்றில் சிக்கிக்கொண்டாலே கடினம்தான் என்று தோன்றுகிறதல்லவா. ஆனால், இத்தனை பிரச்சினைகளையும் கடந்து யூ.பி.எஸ்.சி. தேர்வில் அகில இந்திய அளவில் 101-வது இடம், தமிழக அளவில் மூன்றாவது நிலையை அடைந்திருக்கிறார் சிவகுரு பிரபாகரன்.

புதுக்கோட்டை அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் படித்தவர் சிவகுரு. ஏழ்மையால் பிளஸ் டூ-வுக்குப் பிறகு மேற்படிப்பு படிக்க முடியாமல் நான்காண்டுகள் மர அறுவை மில்லில் வேலை செய்யும் சூழலுக்குத் தள்ளப்பட்டவர். வீட்டுக்குத் தெரியாமல் பொறியியல் பட்டம் பெற்றுப் பிறகு ஐ.ஐ.டி. கனவைப் பின்தொடர்ந்து எம்.டெக். முடித்துத் தற்போது ஐ.ஏ.எஸ். ஆகத் தேர்வாகி உள்ளார்.

“என்னுடைய வாழ்க்கைப் பாதை முட்கள் நிறைந்ததாக இருந்தாலும் எனக்குக் கிடைத்த நண்பர்களும் பேராசிரியர்களும் என்னை ஒவ்வொரு கட்டத்திலும் தாங்கிப்பிடித்தார்கள். எனக்கு கிடைத்த நம்பிக்கை ஒளிக்கீற்றுகளைப் பின்தொடர்ந்து, அவமானங்களால் சோர்ந்துபோகாமல் உழைத்தேன். பொறியியல் படித்தபோது, ஆங்கிலத்தில் ஒரு வரிகூடப் புரியாது. ஆனால், தினந்தோறும் 20 வார்த்தைகள் வீதம் கற்றுத் தேர்ந்தேன். அப்போதும் கேள்விக்குப் பதில் எழுதும் அளவுக்குத்தான் கற்றுக்கொள்ள முடிந்தது.

பிறகு என்னுடைய கணிதத் திறனால் ஐ.ஐ.டி.யில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது ஆங்கில மொழி அறிவு, அரசியல் அறிவு, தொழில்நுட்ப அறிவு என அத்தனையையும் விடாமுயற்சியால் கைவரப் பெற்றேன்” என்கிறார். நான்காண்டு களுக்கு முன்னமே ஐ.இ.எஸ். ஆகிவிட்டாலும் ஐ.ஏ.எஸ். கனவை நிஜமாக்க அனைத்துத் தடைகளையும் தாண்டிய இவருடைய இலக்கு தன்னைப் போலவே வாய்ப்பு வசதியற்றவர்களின் வாழ்வை வளப்படுத்துவதே.

வெவ்வேறு சமூகப் பொருளாதாரப் பின்னணியில் இருந்து இவர்கள் வந்திருந்தாலும் இந்த மூவரின் தாரக மந்திரம், ‘கடுமையான உழைப்பு, நிச்சய வெற்றி’.

நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்!

www.mrunal.org

www.insightsonindia.com

https://iasbaba.com/

http://iasbyheart.com/

- கீர்த்தி வாசன், மதுபாலன் பரிந்துரைத்த யூ.பி.எஸ்.சி. இலவச வழிகாட்டி இணையதளங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x