Last Updated : 01 May, 2018 10:34 AM

 

Published : 01 May 2018 10:34 AM
Last Updated : 01 May 2018 10:34 AM

துணைத் திறனும் இன்றைக்குத் தேவை!

 

“ஐ

ந்தாண்டுகளுக்கு முன்னால் இந்தப் படிப்புதான் கொடிகட்டிப் பறந்துச்சு. அதை நம்பிப் படிச்சேன். ஆனால் இப்போ அதுக்கு மதிப்பில்ல” எனப் புலம்பும் பலரைப் பார்க்கிறோம்.

படித்த படிப்புக்கான வேலை தற்சமயம் கிடைத்திருந்தாலும் பணித் தேவைகள் மாறிக்கொண்டே இருப்பதால் எந்நேரமும் வேலை பறிபோகுமோ என்ற பயத்திலேயே பலர் ஆழ்ந்துகிடக்கிறார்கள். பணி நிறைவு காலத்துக்கு ஒருவர் வந்தடையும் முன்னமே அவருடைய பணி அர்த்தமற்றுப் போகும் நிலை இன்று சகஜமாகிவருகிறது. சர்வதேசப் பணிச் சந்தை மாறிக்கொண்டே இருப்பதால் நம் தேசத்தைப் போலவே பல நாடுகளும் இதே சிக்கலை எதிர்கொண்டுவருகின்றன.

அதிசய சிங்கப்பூர்

எதை இன்று படித்தால் நாளை வேலை கிடைக்கும் என்பதுதான் புதிய கல்வி ஆண்டு தொடங்கவிருக்கும் இவ்வேளையில் நம் புதிய தலைமுறையினரின் முன்னால் நிற்கும் சவால். இந்தப் பெருஞ்சிக்கலைக் கையாளும் சூட்சுமத்தை அண்டை நாடான சிங்கப்பூர் நமக்குக் கற்றுத்தருகிறது.

இத்தனைக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்ட மற்ற நாடுகளைப் போலவே சிக்கித் தவித்த நாடுகளில் ஒன்றுதான் சிங்கப்பூர். 1965-ம் ஆண்டில் அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடியது. அன்றைய காலகட்டத்தில் சிங்கப்பூர் மக்களில் 57 சதவீதத்தினர் மட்டுமே படிப்பறிவோடு பணித்திறன் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். ஆனால், இன்றோ வேலை அற்ற சிங்கப்பூர் வாசிகள் 2.0 சதவீதத்தினர் மட்டுமே. சிங்கப்பூர் வாசிகளின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது உலகச் சராசரியைவிடவும் 300 சதவீதம் கூடுதலாக இருக்கிறது. உலகின் தலைசிறந்த மாணவர்கள் தரவரிசைப் பட்டியலில் ஆண்டுதோறும் சிங்கப்பூர் மாணவர்கள் இடம்பிடித்துவிடுகிறார்கள்.

படைப்பாற்றலும் பணிவாழ்க்கையும்

இத்தனையும் சிங்கப்பூருக்குச் சாத்தியமானது எப்படி? சிங்கப்பூர் வழங்கும் எளிய தீர்வு – ‘துணைத் திறன்’ (‘Second-Skilling’).

“நம்முடைய பணிகளை மறு வடிமைக்க வேண்டும், புதிய பணிகளுக்கு ஏற்றவாறு நம் மக்களின் திறனை மெருகேற்ற வேண்டும். இதைச் சாத்தப்படுத்தும் பொறுப்பு தொழிலாளர், முதலாளி, அரசாங்கம் ஆகியோரை உள்ளடக்கிய ஒட்டுமொத்தச் சமூகத்துக்கும் உள்ளது” என்று சமீபத்தில் தெரிவித்தார் சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினரான பாட்ரிக் டே. படைப்பாற்றலுடன் கூடிய பணிவாழ்க்கையை சிங்கப்பூர் மக்கள் திட்டமிட அவர்களுக்கு வழிகாட்ட சிங்கப்பூர் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரி இவர்.

பணிவாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ள நாம் பணிபுரியும் வேலையைத் தவிர மற்றுமொரு பணித் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே பாட்ரிக் டே பரிந்துரைக்கும் வழி. அந்த ‘துணைத் திறன்’ உங்களுடைய தற்போதைய பணிக்குத் தொடர்புடையதாகவும் இருக்கலாம் அல்லது புதிய தொழில் பாதையை உங்களுக்கு அமைத்துத் தர வல்லதாகவும் இருக்கலாம்.

தேசத்தின் பொருளாதார வளர்ச்சி

ஆனால், இத்தகைய ‘துணைத் திறன்’ பயிற்சிக்கு யார் பணம் செலவழிப்பது? சிங்கப்பூர் இதற்குத் தரும் விடை ஆச்சரியப்படுத்துகிறது. ‘ஸ்கில்ஸ் ஃபியூச்சர்’ (‘Skills Future’) என்ற திட்டத்தின் கீழ் 25 வயது, அதற்கு மேற்பட்ட சிங்கப்பூர் வாசிகள் தங்களுக்கு விருப்பமான பணித் துறையில் பயிற்சி மேற்கொள்ளத் தலைக்கு 500 சிங்கப்பூர் டாலர்களை சிங்கப்பூர் அரசு வழங்குகிறது. இந்தியப் பண மதிப்பின்படி ரூ. 23 ஆயிரத்துக்குச் சமமான இத்தொகையில் தனிநபர் தனக்குப் பிரியமான எதிலும் பயிற்சி பெறலாம். தற்சமயம் வேலை பார்க்கும் நிறுவனம் எதிர்பார்க்கும் திறனை மட்டுமே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் எவையும் கிடையாது.

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் வரையறைக்கு உட்பட்டுச் செயல்படுவதால் இந்தத் திட்டம் சிங்கப்பூரில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. தங்களுடைய வெற்றிக்கான மற்றுமொரு ரகசியத்தை பேட்ரிக் வெளிப்படுத்தி இருக்கிறார். “அரசாங்கம், தொழிலாளர்கள், தொழிலாளர் சங்கங்கள் ஆகியவை முப்பெரும் கூட்டணியாக சிங்கப்பூரில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. மூன்று தரப்பினரும் ஒரே அரங்கத்தில் உரையாடும் சுமூகமான சூழலை உருவாக்கியிருக்கும் மிகச் சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. எங்களுக்கு இடையில் யாருக்கு லாபம் என்ற போட்டி கிடையாது. ஒட்டுமொத்த தேசத்தின் பொருளாதார வளர்ச்சியே எங்களுடைய இலக்கு” என்கிறார் பேட்ரிக் டே.

பணியாளர்களிடம் உழைப்பைச் சுரண்டிவிட்டு அவர்களைத் தூக்கி எறியும் மனப்பான்மை இன்றி பணிச் சூழல் பிரச்சினைகளை எதிர்கொள்ளப் பணியாளர்களைத் தயார்படுத்தும் பொறுப்பை அரசாங்கமே சிங்கப்பூரில் ஏற்றுக்கொள்கிறது. நிறுவனங்களும் தங்களுடைய உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிகளை ஊழியர்களுடன் ஒன்றிணைந்து திட்டமிடுகின்றன. இதனால் ஒட்டுமொத்தச் சமூகமும் பலனடைகிறது.

shutterstock_705241120பேரார்வத்தைப் பின்தொடர்தல்

இந்தியக் கல்வித் துறையும் அரசாங்கமும் ‘துணைத் திறன்’ வளர்ப்பு மற்றும் ஊக்குவிப்பு குறித்துத் திட்டமிட்டுச் செயல்படுவது ஒருபுறம் இருக்க நம் மாணவர்களும் இளைஞர்களும் சிங்கப்பூரின் ‘துணைத் திறன்’ கருத்தாக்கத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது பேரார்வத்தைப் பின்தொடரும் பண்பாகும்.

ஒளிப்படக் கலை, ஓவியம் தீட்டுதல், நடனமாடுதல், இசைக் கருவி வாசித்தல் போன்ற தங்கள் மனதுக்கு நெருக்கமான பிரிவுகளில் பணி புரிய முடியவில்லையே என்ற ஏக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். விருப்பமான துறையை மறந்துவிட்டு வேலைக்காக இன்னொரு துறைக்குள் நுழைந்திருப்பவர்கள் ‘துணைத் திறன்’ வளர்ப்பு சிந்தனையின்படி பேரார்வத்தைப் பின்தொடரலாம். இதன் மூலம் ஆசைப்பட்ட துறையிலும் ஆத்மார்த்தமாகத் தடம் பதிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x