

தொ
ழிற்கல்விப் படிப்புகளைப் படித்தால் மட்டுமே சிறப்பான வேலைவாய்ப்பைப் பெற முடியும் என்பதான கற்பிதங்கள் தற்போது மாறி வருகின்றன. அதிலும் உரிய வேலைவாய்ப்புகளுடன், பிற படிப்புகள் தராத சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை கலைப் படிப்புகள். இத்துறையைச் சேர்ந்த அரசியல் அறிவியல், பொது நிர்வாகவியல், பொருளாதாரம், சமூகவியல், வரலாறு உள்ளிட்ட படிப்புப் பிரிவுகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.
பொதுவாகப் பள்ளி மேல்நிலை வகுப்புகள் தொடங்கிக் கல்லூரிவரை கலைப் படிப்புகள் என்றாலே, வேறு பாடங்களில் இடம் கிடைக்காதவர்கள், மதிப்பெண் தகுதி குறைந்தவர்கள், சுமாராகப் படிக்கும் மாணவர்கள் ஆகியவர்களுக்கான துறை என்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், நடைமுறையில் கலைப் படிப்புகள் இந்த அவநம்பிக்கைகளை உடைத்துப்போடுகின்றன.
தனக்கு விருப்பமான கலைப் பாடத்தைத் தேர்வு செய்வதுடன் அவற்றைத் தரமான கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பதன் மூலம் மாணவர்கள் தங்களது தகுதியை மேலும் உயர்த்திக்கொள்ளலாம். உதாரணத்துக்கு இளங்கலை முடித்தவர்கள், முதுகலையை டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற செறிவான பாடத்திட்டம் கொண்ட சர்வதேசத் தரத்திலான கல்வி நிலையங்களில் கற்றுத் தங்கள் தகுதியை உயர்த்திக்கொள்ளலாம்.
மாணவர்கள் தமது தனிப்பட்ட பாட விருப்பம், விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடம் கிடைப்பது, எதிர்பார்க்கும் வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து இளங்கலையில் பாடத்தை முடிவு செய்யலாம். தமிழகக் கல்லூரிகளைப் பொறுத்தவரை அரசியல் அறிவியல், தத்துவம், பொது நிர்வாகம், சமூகவியல் போன்ற துறைகள் அரிதாகவும், பொருளாதாரம், வரலாறு, இலக்கியம் போன்றவை பரவலாகவும் தேர்வுசெய்யப்படுகின்றன.
இளங்கலையில் பொருளாதாரத் துறை வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. உயர் மதிப்பெண் பெறும் மாணவர்கள் பொறியியலுக்கு இணையாகப் பொருளாதாரப் படிப்புக்கான சேர்க்கைக்குப் போட்டிபோடுகிறார்கள். இதைப் படித்துவிட்டு ஐ.இ.எஸ். எனப்படும் இந்திய பொருளாதாரப் பணி அதிகாரியாகவும் ஆகலாம்.
பொருளாதாரம், புள்ளியியல் இணைந்த ‘எக்கனாமெட்ரிக்ஸ்’ படிப்பு, வேலைவாய்ப்பு அடிப்படையில் தற்போது பிரபலமாகி வருகிறது. இதேபோன்று குடும்பம், அமைப்புகள், சிந்தனைகள் தொடர்பான சமூகவியல் பாடம் சுவாரசியமானதும்கூட. தமிழகத்தில் பெரும்பான்மையான அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் வரலாறு படிக்கலாம். பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியராகும் வாய்ப்புகளுடன், போட்டித் தேர்வுகள் முதல் குடிமைப் பணி தேர்வுவரை இலக்காகக் கொண்டவர்கள் எளிமையான இப்படிப்பைத் தேர்வு செய்கின்றனர்.
சமூக அறிவியல் படிப்புகளைத் தமிழகத்தின் பெரும்பாலான அரசுக் கல்லூரிகள் வழங்குகின்றன. சமூக அடிப்படையிலான பல்வேறு ஊக்கத் தொகைகள் கிடைக்கும் என்பதால் அரசுக் கல்லூரிகளில் செலவின்றிப் படிக்கலாம். டெல்லி லேடி ஸ்ரீராம் (மகளிர்), சென்னை லயோலா, பெங்களூர் கிறைஸ்ட் பல்கலைக்கழகம், மும்பை செயின்ட் சேவியர் போன்றவை சமூக அறிவியல் துறைகளுக்கான இந்தியாவின் ‘டாப்’ கல்லூரிகளில் முதல் வரிசையில் உள்ளன.
இளங்கலையைத் தொடர்ந்து விரும்பிய முதுகலை, இளம் முனைவர், முனைவர் என உயர் படிப்புகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம். இளங்கலையைவிட முதுகலையில் கூடுதலான எண்ணிக்கையில் விருப்பப் பாட வாய்ப்புகள் உள்ளன. இந்த வகையில் அதே துறையில் மட்டுமன்றி வேறு பாடப் பிரிவுகளிலும் முதுநிலைப் படிப்புகளைப் படிக்கலாம். பி.ஏ. சோஷியாலஜி படித்த மாணவர் எம்.ஏ.வில் அதே பாடம் அல்லது சமூகப் பணி ((MSW), எம்.பி.ஏ. என விரும்பிய தளங்களில் படிப்பை விரிவு செய்துகொள்ளலாம். ஆனால், பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிகளுக்கு இளங்கலை, முதுகலை இரண்டிலும் ஒரே பாடத்தை எடுத்துப் படித்திருப்பது அவசியம்.
கலைப் படிப்புகளில் ஆர்வம் கொண்டோருக்கு அரசு கலைக் கல்லூரிகள் ஏராளமான பாடப் பிரிவுகளுடன் காத்திருக்கின்றன. அரசு உதவி பெறும் கல்லூரிகளும் இதில் சேரும். பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் கலைப் படிப்புகளில் ஏராளமான முதுநிலைப் பட்டங்களை வழங்குகின்றன.
அடுத்ததாக ஜவாஹர்லால் நேரு போன்ற தேசியப் பல்கலைக்கழகங்கள் சர்வதேசத் தரத்திலான முதுநிலை மற்றும் ஆராய்ச்சி நிலையிலான சமூகப் படிப்புகளை வழங்குகின்றன. திருவாரூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் செயல்படும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் மதிப்பு வாய்ந்த சமூக அறிவியல் கலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
சென்னை ஐ.ஐ.டி. ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.ஏ., படிப்பை (https://hss.iitm.ac.in/course/m-a-programme/) வழங்குகிறது. போட்டி மிகுந்த இப்படிப்பில் சேர பிரத்யேக நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். மும்பை, ஹைதராபாத், கவுகாத்தி ஆகிய மையங்களில் செயல்படும் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் (http://www.tiss.edu/) சமூகப் பணி தொடர்பான பல்வேறு முதுநிலைப் பட்டம் மற்றும் பட்டயங்களை வழங்குகிறது.
எத்துறை சார்ந்த வேலைவாய்ப்பானாலும் அவற்றுக்கான அடிப்படைத் திறன்களைக் கலைப் படிப்புகள் கொண்டிருக்கும். கலைப் பாடங்களைப் படித்தவர்கள் பல்துறை விற்பன்னர்களாக ஜொலிப்பதின் அடிப்படை இதுதான்.
ஊடகம்: பொருளாதாரம், சமூகவியல் போன்ற துறைகளில் உயர் படிப்பு முடித்தவர்களால் அத்துறை சார்ந்த ஆழமான கட்டுரைகளை எழுத முடியும். இதழியல் சார்ந்து முதுநிலையில் பட்டம் அல்லது பட்டயப் படிப்பை படித்துவிட்டு ஊடகத் துறைக்கு வரலாம்.
போட்டித் தேர்வுகள்: குடிமைப் பணிக்கான தேர்வில் பெரும்பாலான வினாக்கள் கலைப் பாடங்களில் இருந்தே கேட்கப்படுகின்றன. அரசியலமைப்பு, வரலாறு, பொருளாதாரம், கலாச்சாரம், சர்வதேச உறவுகள் உள்ளிட்டவற்றைத் தனியாகப் படிப்பதைவிட அதையே பாடமாக எடுத்துப் படிப்பவர்கள் சிறப்பாக வெற்றி பெற முடியும். அதேபோல குரூப் 1 தேர்வு, வங்கித் தேர்வில் கேட்கப்படும் பொது அறிவுக் கேள்விகளுக்குக் கலைப் பாடங்களைப் படித்தவர்களால் சிறப்பாக பதிலளிக்க முடிகிறது.
ஆசிரியர் பணி: பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதவும், கல்லூரிகளில் விரிவுரையாளர் ஆவதற்கான NET, SET தகுதித் தேர்வுகள் எழுதவும் கலைப் பாடங்கள் அடிப்படையாக இருப்பதுடன் கூடுதல் அறிவு பெறவும் உதவுகின்றன. இதில் யூ.ஜி.சி. நடத்தும் தேசிய அளவிலான நெட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ‘மெரிட் கம் மீன்ஸ்’ என்ற பெயரில் ஊக்கத்தொகை தாராளமாக வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பேராசிரியராக உருவாகலாம்.
அரசியல் சேவை: மாணவர்கள், படித்தவர்கள் அரசியலில் ஈடுபடுவது உலக அளவில் அதிகரித்துவருகிறது. அமெரிக்க மாகாணங்கள், கனடா அமைச்சரவை ஆகியவற்றில் நன்கு படித்த இந்திய வம்சாவளியினர் அங்கம் வகிக்கின்றனர். கலைப் பாடங்களைப் படித்தவர்கள் தாங்கள் பெற்ற சமூக அறிவியல் கல்வியின் அடிப்படையில் அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெறவும் முடியும்.
குறிப்புகளை வழங்கியவர் முனைவர் பி.கனகராஜ், அரசியல் அறிவியல் துறைத் தலைவர், கோவை அரசு கலைக் கல்லூரி.