குமரியில் மதுக்கூடமாக மாறிவரும் அரசுப் பள்ளிகள் - பெற்றோர் வேதனை

குமரி மாவட்டம் சுங்கான்கடை அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறையில் மது அருந்திவிட்டு ஜன்னல்களில் குடிமகன்கள் வைத்துச் சென்ற மதுபாட்டில்கள்.
குமரி மாவட்டம் சுங்கான்கடை அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறையில் மது அருந்திவிட்டு ஜன்னல்களில் குடிமகன்கள் வைத்துச் சென்ற மதுபாட்டில்கள்.
Updated on
1 min read

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பராமரிப்பில்லாத அரசுப் பள்ளிகள், மதுக்கூடமாக மாறியுள்ளன. இதனால் மாணவர்களின் பெற்றோர் வேதனை அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் பாதுகாப்பும், பராமரிப்பற்றும் புதர்மண்டிக் கிடக்கும் அரசு பள்ளிகளை தங்களுக்கு சாதகமாக மதுப்பிரியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு இரவு நேரத்திலும், சனி, ஞாயிறுமற்றும் விடுமுறை நாட்களிலும் அமர்ந்து மது அருந்துவதுடன் மதுபாட்டில்களை அங்கேயே வீசிச் செல்கின்றனர். இதனால் மதுபாட்டில்களும், அவர்கள் பயன்படுத்திய தின்பண்டங்களின் மீதமும் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன.

ஒருபுறம் அரசும், மாவட்ட நிர்வாகமும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கு தொடர் முயற்சிகளையும், அரசு திட்டங்களையும் செயல்படுத்தி வரும் அதே வேளையில் இதுபோன்ற அவலம் நிலவி வருகிறது. குறிப்பாக, நாகர்கோவில் அருகே சுங்கான்கடை தெற்குதெருவில் பழமைவாய்ந்த அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளிக் கட்டிடம் பாழடைந்த நிலையில் சுற்றிலும் காடுபோன்று புதர்மண்டிக் காணப்படுகிறது. பாதுகாப்பற்ற நிலையில் பராமரிப்பின்றி காணப்படும் இப்பள்ளியை சுங்கான்கடை மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த குடிமகன்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றியுள்ளனர்.

வகுப்புகள் உள்ள நாட்களைத்தவிர பிற விடுமுறை நாட்களில் பகலிலும்பள்ளி வகுப்பறைகளுக்குள் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதுபோன்று இரவு நேரத்திலும் பள்ளியை மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். காலையில் வகுப்புகளுக்கு வரும் பள்ளி மாணவர்கள் மது பாட்டில்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய பின்னரே, பாடம் நடத்த முடிகிறது. இதுபோல், பள்ளி வளாகத்திலும் பரவலாக மதுபாட்டில்கள் வீசி எறியப்பட்டுள்ளது. இதனால், நாளுக்குநாள் இங்கு மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.

தற்போது, இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 50 பேராக குறைந்துள்ளது. இதே நிலை சென்றால் இப்பள்ளியை மூடும் சூழல் ஏற்படும். எனவே, குமரி மாவட்ட ஆட்சியர், மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மதுக்கூடமாக மாறிவரும் பள்ளியை சீரமைக்க கடும் கட்டுப்பாடு விதிப்பதுடன், அங்கு மது அருந்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in