இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு: மொத்தம் 25,319 பட்டதாரிகள் பங்கேற்பு

மாதிரிப் படம்
மாதிரிப் படம்
Updated on
1 min read

சென்னை: அரசுப் பள்ளிகளில் உள்ள 2,768 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வில் 25,319 பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிகளில் காலியாக உள்ள 2,768 இடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) கடந்த பிப்ரவரி 9-ம் தேதி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து இணையவழியில் விண்ணப்பப் பதிவு நடைபெற்றது.

இந்த போட்டித் தேர்வை டெட் முதல் தாள் தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டுமே எழுத முடியும். அந்த வகையில் இத்தேர்வை எழுதுவதற்கு டெட் தேர்ச்சி பெற்றவர்களில் தமிழகம் முழுவதும் மொத்தம் 26,510 பேர் விண்ணப்பித்தனர்.

இதற்கிடையே இடைநிலை ஆசிரியர் பணித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பின் நிர்வாக காரணங்களுக்காக தேர்வு ஜூலை 21-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி போட்டித் தேர்வு மாநிலம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இந்த தேர்வை 25,319 பட்டதாரிகள் வரை எழுதினர். தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் எனவும், கூடுதல் விவரங்களை www.trb.tn.gov.in/ எனும் வலைத்தளம் வழியாக அறிந்து கொள்ளலாம் எனவும் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in