

மதுரை: பள்ளிக் குழந்தைகள் வாழ்க்கையிலும் மொபைல் போன்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலகட்டத்தில் அவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை தூண்டும் வகையில், பழைய பள்ளிப் பேருந்து ஒன்றை நூலகமாக மாற்றியுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பொதுவாக இன்று குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கமும், எதையும் உற்று நோக்கி கவனிக்கும் திறனும் குறைந்து வருகிறது. பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பியதும், அதிக நேரத்தை மொபைல் போன்களில் செலவிடுகிறார்கள். பெற்றோர்கள் கண்காணிப்பை தாண்டி டிஜிட்டல் உலகில் மூழ்கிக் கிடக்கின்றனர். அதனால் குழந்தைகளுக்கு பார்வைக் குறைபாடு, கற்றல் திறன் குறைபாடுகளும் ஏற்படுகின்றன.
டிஜிட்டல் திரைகள் ஆதிக்கம் செலுத்தும் இக்காலகட்டத்தில் புது முயற்சியாகவும், குழந்தை களை ஈர்க்கக்கூடிய வகையிலும் மதுரை அருகே முத்துப்பட்டியில் சக்தி-விடியல் தொண்டு நிறுவனம், போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத பள்ளிப் பேருந்து ஒன்றை, நூலகமாக வடிவமைத்து அதில் ஒரே நேரத்தில் 20 குழந்தைகள் வரை அமர்ந்து புத்தகம் படிக்கும் வாசிப்பு உலகமாக மாற்றியுள்ளனர்.
சக்தி-விடியல் தொண்டு நிறுவனம், மதுரையில் 25 இடங்களில் விளிம்புநிலை மக்களின் குடியிருப்பு களில் உள்ள குழந்தைகளுக்கு மாலை நேர வகுப்புகள் நடத்துகிறது. அக்குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக இந்த பஸ் நூலகத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். பள்ளி விடுமுறை நாட்களில் இந்த நூலகத்தை தற்போது பயன்படுத்தி வரு கிறார்கள்.
இதுகுறித்து மதுரை சக்தி-விடியல் செயல் இயக்குநர் ச.ஜிம் ஜேசுதாஸ் கூறியதாவது: எங்கள் விடியல் தொண்டு நிறுவன குழந்தைகளுக்காக பயன்படுத்தி வந்த பள்ளிப் பேருந்து ஒன்று காலாவதியாகி நின்றது. இதனை என்ன செய்யலாம் என யோசித்தபோது, எனக்கு டெட்சுகோ குரோயனகி எழுதிய 'டோட்டோ-சான்: தி லிட்டில் கேர்ள் அட் தி விண்டோ' என்ற ஜப்பான் நாட்டின் குழந்தைகளுக் கான புத்தகம் ஒன்றை படித்தது ஞாபகம் வந்தது. இந்த புத்தகம், பல மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்ட பெருமை பெற்றது.
அந்த புத்தகத்தில், 2-ம் உலகப்போர் காலக் கட்டத்தில் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்களுக்கு செல்ல வாய்ப்பில்லாமல் பழைய ரயில் பெட்டி களையே பள்ளிக்கூடமாக மாற்றி கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது குறித்து படித்திருந்தேன். அந்த புத்தகம்தான் என்னை இந்த பழைய பள்ளிப் பேருந்தை, நூலகமாக மாற்றத் தூண்டியது.
முதலில் அதிகம் செலவாகுமே என்ற சிறு தயக்கம் ஏற்பட்டது. ஆனால், எங்களுடைய தொழில்நுட்ப ஊழியர்கள், நன்கொடையாளர்கள் உதவியுடன், அந்த பழைய பேருந்தை, ஒரு அற்புதமான நூலகமாக வடிவமைத்தோம். பேருந்தில் இருந்த இருக்கைகளை குழந்தைகள் சுற்றி அமர்ந்து படிக்கும் வகையில் மாற்றினோம். மின்விசிறிகளும் பொருத்தினோம். பின்னர் அந்தப் பேருந்தை இரும்புக் கம்பிகளை கொண்டு அந்தரத்தில் தூக்கி நிறுத்தினோம்.
இன்று குழந்தைகள், மொபைல் போன்களில் ரீல்ஸ் வீடியோக்களைக்கூட முழுமையாக பார்ப்பது கிடையாது. 'பிரேம் டூ பிரேம்' மட்டுமே நொடிப் பொழுதில் பார்த்து அடுத்தடுத்து என்று சென்று விடுகிறார்கள். குழந்தைகளையும், அவர்கள் மனதையும் ஒரே இடத்தில் அமர வைத்து சிந்திக்க வும், வாசிக்கவும் வைப்பது சிரமமானது.
அத்தகைய குழந்தைகளுக்கு வாசிப்பு பழக் கத்தை தூண்டவும், உற்சாகமாக நூலகத்துக்கு வர வழைக்கவுமே, பேருந்து நூலகம் அமைத்தோம். பேருந்தில் பயணிப்பது போன்ற உணர்வுடன் விளையாடிக் கொண்டே அவர்கள் புத்தகங்களை வாசிக்கிறார்கள். குழந்தைகள் தற்போது உற்சாகமாக இங்கு வருகிறார்கள். சிலர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து படிக்கிறார்கள். சிலர் ஜன்னல்களை நோக்கியபடி படிக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு இந்த நூலகம் புது அனுபவத்தை கொடுக்கிறது. தற்போது முதற்கட்டமாக எங்களிடம் மாலைநேர வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளை இங்கு படிக்க அனுமதிக்கிறோம். அவர்களுக்கு புதிய வாசிப்பு அனுபவம் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். படிப்படியாக, அக்கம் பக்கத்தில் உள்ள மற்ற குழந்தைகளுக்கும் இலவசமாக இந்த நூலகத்தை பயன்படுத்த அனுமதிக்க உள்ளோம்.
இந்த நூலகத்தில் மொத்தம் 300 புத்தகங்கள் வைத்துள்ளோம். 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் வாசிக்கக்கூடிய வகையில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலும், நன்னெறி கதை புத்தகங்கள், வீர தீர சாகசங்கள் செய்தவர்கள், சமுதாயத்துக்கு பெரும் பங்காற்றியவர்களின் வாழ்க்கை வரலாற்று கதை புத்தகங்கள், அறிவியல் புத்தகங்கள், புதிர் கதை புத்தகங்கள் வைக்கப் பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார் பெருமிதமாக!