நேரடி மாணவர் சேர்க்கைக்கு வடசென்னை ஐடிஐ-யில் விண்ணப்பிக்கலாம்

நேரடி மாணவர் சேர்க்கைக்கு வடசென்னை ஐடிஐ-யில் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

சென்னை: வடசென்னை ஐடிஐ-யில் நேரடி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார். சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின்கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) நடப்பாண்டு மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதற்காக 10-ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ மற்றும் அதற்கு மேல் கலை அறிவியல், பொறியியல் படித்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. வடசென்னை ஐடிஐயில் சிவில் இன்ஜினீயரிங் அசிஸ்டென்ட், டிராப்ட்ஸ்மேன் சிவில், டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கல், டர்னர், மெஷினிஸ்ட், லிப்ட் மெக்கானிக், பிட்டர், ஏசி மெக்கானிக் ஆகிய 2 ஆண்டு தொழிற்பிரிவுகளிலும், இன்டீரியர் டிசைன் அண்ட் டெக்கரேஷன், வெல்டர், பிளம்பர் போன்ற ஓராண்டு தொழிற்பிரிவுகளிலும், 6 மாத தொழிற்பிரிவான ட்ரோன் பைலட் தொழிற்பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இத்துடன், தமிழக அரசு டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிற்பிரிவுகளான இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ், டிஜிட்டல் டெக்னீஷியன், மின்சார வாகன மெக்கானிக், அட்வான்ஸ் சிஎன்சி மெசினிங் டெக்னீஷியன், பேசிக் மெக்கானிக்கல் டிசைனர் போன்றவற்றுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

பயிற்சிகள் முடிந்தவுடன் வளாக நேர்காணல் நடத்தி தொழில் நிறுவனங்களில் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். பயிற்சியில் சேர கட்டணம் கிடையாது. கூடுதல் விவரங்களுக்கு 044-25209268 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தகுதியுள்ள மாணவர்கள் அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் வந்து விருப்பமான தொழிற்பிரிவுகளை தேர்ந்தெடுத்து வரும் 15-ம் தேதிக்குள் பயிற்சியில் சேர்ந்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in