இளநிலை மருத்துவ படிப்புக்கு கவுன்சலிங் எப்போது? - மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: நீட் கவுன்சலிங் தேதியே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அது தள்ளிவைக்கப்படுவதாக வெளியான செய்தி தவறானது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இம்மாத இறுதியில் கவுன்சலிங் நடைபெறலாம் என அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை மத்திய அரசு கடந்த மே 5-ம் தேதி நடத்தியது. இதில் வினாத்தாள் கசிவு உட்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நீட்தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ)தலைமை இயக்குநர் நீக்கப்பட்டார்.

நீட் தேர்வு ரத்து தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்த தேசிய தேர்வு முகமை, முறைகேடுகள் மிகப்பெரியளவில் நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை எனவும், நீட் தேர்வை ரத்து செய்தால் நேர்மையாக தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனவும் கூறியது.

இதையடுத்து நீட் தேர்வு கவுன்சலிங் நடவடிக்கைகளை தள்ளிப்போட உச்சநீதிமன்றம் கடந்த மாதம் மறுத்துவிட்டது. நீட் கவுன்சலிங் நேற்று தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

தவறான தகவல்: மருத்துவக் கல்லூரிகள் சிலவற்றுக்கு அனுமதி கடிதம் வழங்குவது, கூடுதல் இடங்களை சேர்ப்பதுதொடர்பான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், இப்பணிகள் முடிந்ததும் கவுன்சலிங் தேதி அறிவிக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. கவுன்சலிங் நடவடிக்கைகள் இந்தமாதம் இறுதியில் நடைபெறலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று தொடங்கப்படுவதாக இருந்த நீட் கவுன்சலிங்,காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நீட் கவுன்சலிங் தேதியே இன்னும் அறிவிக்கப்படாததால், அது தள்ளிவைக்கப்படுவதாக வெளியாகும் செய்தி தவறானது என கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in