எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை முடிந்த பிறகே துணை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கு 67,079 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எம்பிபிஎஸ் கலந்தாய்வு முடிந்த பிறகு துணை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்த மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,200-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 15 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்நிலையில், அந்த இடங்களுக்கான 2024-25-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த மேமாதம் 23-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி ஜூன் 26-ம்தேதியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 67,079 மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு தொடர்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் மருத்துவக் கல்வி மாணவர் தேர்வுக்குழு செயலாளர் பி.அருணலதாவிடம் கேட்டபோது, “விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். எம்பிபிஎஸ் கலந்தாய்வு முடிந்த பிறகே, துணை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்கும்.முன்கூட்டியே நடத்துவதால் கல்லூரிகளில் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே இருக்கின்றன. அதனால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in