

சென்னை: ஏ.ஐ. உள்ளிட்ட புதிய தொழில்நுட்பம் உட்பட புதிய தொழில்நுட்பங்களை எதிர்கொள்ள பொறியியல் பட்டதாரிகள் தயாராக இருக்க வேண்டும் என ஏஐசிடிஇ தலைவர் டி.ஜி.சீதாராமன் வலியுறுத்தினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்து பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 66 மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களையும், பிஎச்டி மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்கினார்.
விழாவில் அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் சீதாராமன் பேசியதாவது:
அண்ணா பல்கலைக்கழகம்தலைசிறந்த பொறியாளர்களையும், கட்டிடக்கலை நிபுணர்களையும், மேலாளர்களையும் உருவாக்கி சமூக வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. மாறிவரும் புதியதொழில்நுட்பங்களுக்கு ஏற்ப திறமைகளை தொடர்ந்து வளர்த்து வர வேண்டும்.
இன்றைய சூழலில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் உள்ளிட்ட வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் ஒட்டுமொத்த மனித வாழ்க்கையை அடியோடு மாற்றி வருகின்றன. ஏஐ மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. புதிய தொழில்நுட்பங்கள் வேலைவாய்ப்புகளை பறித்துவிடும் என்று அச்சப்படாமல் அவற்றோடு இணைந்து பணியாற்ற கற்றுக்கொள்ள வேண்டும்.
உண்மையில் ஏஐ தொழில்நுட்பம் ஒட்டுமொத்த பணிச்சூழலையே மாற்றிவிட்டது. ஏஐ உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப பொறியாளர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில் ஏஐ தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் இந்த தொழில்நுட்ப பயன்பாட்டில் அறநெறி மற்றும் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும்.
தொழில்நுட்ப பாடங்களை தமிழ்உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் ஏஐசிடிஇ வெளியிட்டு வருகிறது. இப்பாடங்களை இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கல்வி உதவித்தொகையும் சரஸ்வதி திட்டத்தில் பிபிஏ, பிசிஏ படிக்கும் மாணவிகளுக்கு நிதி உதவியும் வழங்கப்படுகிறது.
புதிய கல்விக்கொள்கையில் 2030-ம் ஆண்டுக்குள் உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது தேசிய அளவில் உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கை 24 சதவீதமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை ஏற்கெனவே 50 சதவீதத்தை தாண்டிவிட்டது. இவ்வாறுஅவர் கூறினார்.
விழாவில் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் வரவேற்றார். பதிவாளர் பிரகாஷ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சக்திவேல் மற்றும்பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் புறக்கணிப்பு? விழா அழைப்பிதழில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிபங்கேற்பார் என பெயர் போடப்பட்டிருந்தது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. துணைவேந்தர் வேல்ராஜ் பேசும்போது, முக்கியபணி காரணமாக அமைச்சர் பங்கேற்க இயலவில்லை என்றார்.