

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்தில் திருமூர்த்திமலை, கோடந்தூர், தளிஞ்சி, ஈசல் திட்டு, குழிப்பட்டி, குருமலை, மாவடப்பு, ஆட்டுமலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.
இங்கு 4,000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். மேற்படி அனைத்து கிராமங்களும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கீழ் உள்ளன. இங்குள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு முறையான கல்வி வழங்குவதில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக் குறியாகும் சூழல் உருவாகி வருகிறது.
இதுகுறித்து, மலைவாழ் மக்கள் கூறியதாவது: திருமூர்த்திமலை, கோடந்தூர்மற்றும் தளிஞ்சிமலைக் கிராமங்கள் ஓரளவு சமதளப் பகுதியில் உள்ளன. மற்ற கிராமங்கள்செங்குத்தான மலைகளிலும், மலைகளுக்கு நடுவிலும், அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவிலும் அமைந்துள்ளன. இந்த மலைக் கிராமங்களுக்கு செல்லத் தேவையான போக்குவரத்து வசதிகள் கிடையாது. மின்சாரம், மருத்துவ வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.
வனப்பகுதிக்குள் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும், பள்ளி கட்டிடங்கள் அமைக்கவும் வனத்துறையின் அனுமதி தேவை. வன விலங்குகளின் பாதுகாப்பு எந்த அளவு முக்கியமோ, அதைவிட அதிகமாக மலைவாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதும் முக்கியம்.
திருமூர்த்திமலை, கோடந்தூர், தளிஞ்சி ஆகிய இடங்களில் அரசு தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு பயிலும்பெரும்பாலான பெண் குழந்தைகள், 5-ம் வகுப்புக்கு பிறகு உயர்கல்வியை தொடர்வதில்லை என்பதே நிதர்சனம். மலைவாழ் கிராமங்களில் பெண்களின் உயர்கல்வியை உறுதிப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழிப்பட்டி, மாவடப்பு கிராமங்களில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளுக்கு சென்றுவர போதிய போக்குவரத்து வசதி இல்லாததால், ஆசிரியர்கள் தடுமாறி வருகின்றனர். குழிப்பட்டியில் உள்ள பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது.இதனால், ஊர் மக்கள் உதவியில் அங்கு பயிலும் 20 மாணவர்களுக்கு வீட்டுத் திண்ணையில் பாடம் நடத்தப்பட்டது. இதுதொடர்பான செய்திகள் பரவியதால், ஒன்றிய நிர்வாகம் சார்பில் பள்ளிக் கட்டிடத்தை பராமரிக்க நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால் கட்டிடத்தை யார் கட்டுவது என்பதில் ஒன்றிய நிர்வாகத்துக்கும், வனத்துறைக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இறுதியில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, ஓராண்டுக்கு மேல் ஆகியும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. நடப்பாண்டு பாடம் நடத்துவதற்கு நிரந்தர மற்றும் முழுநேர ஆசிரியர்கள் யாரும் முன் வரவில்லை. குழிப்பட்டி, மாவடப்பு பள்ளிகளுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு 3 வேளையும் உணவு அளித்து, உண்டு உறைவிடப் பள்ளிகளாக மாற்றி அமைக்க வேண்டும். 5-ம் வகுப்புக்குப்பின் இருபால் குழந்தைகளும் உயர் கல்வி பயில வாகனப் போக்குவரத்து வசதி செய்ய வேண்டும். பாதுகாப்பான கல்விக்கு தேவையான கட்டிடங்களை கட்ட மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும், என்றனர்.
உடுமலை ஒன்றிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘குழிப்பட்டி பள்ளி பராமரிப்புக்கென நிதி ஒதுக்கப்பட்டது. வனத்துறையினர்தான் பணிகளை மேற்கொள்ள முடியும். அதுகுறித்து வனத்துறையினரிடம் சுமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் பணிகள் தொடங்கும்’’ என்றனர்.
வனத்துறையினர் கூறும்போது, ‘‘புலிகள் காப்பகத்துக்குள் எவ்வித வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ள அனுமதி இல்லை. பள்ளிக் கட்டிடம் தொடர்பாக மத்திய அரசு நிதி ஒதுக்கியதாக கூறப்படுகிறது. ஒன்றிய அதிகாரிகளும் அணுகியுள்ளனர். வனத்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பிறகே கட்டுமானப்பணிகளை தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்’’ என்றனர்.