தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 4 பேர் முதலிடம்

நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி. படங்கள் : ஜெ.மனோகரன் 
நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி. படங்கள் : ஜெ.மனோகரன் 
Updated on
1 min read

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டது 4 பேர் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர். 8 பேர் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளனர்.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகள் உள்ளன. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் இளநிலை பிரிவில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் பெற முடிவு செய்யப்பட்டன.

அதன்படி, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மின்வள பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 12-ம் தேதி வரை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் பெறப்பட்டது.

இதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது . வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வில் துணைவேந்தர் கீதாலட்சுமி பங்கேற்று தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, “நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்காக 33 ஆயிரத்து 973 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 29 ஆயிரத்து 969 விண்ணப்பங்கள் தரவரிசை பட்டியலுக்கு ஏற்கப்பட்டன. அது தவிர முன்னாள் ராணுவத்தினருக்கான பிரிவில் 234 பேர், அரசு பள்ளியில் படித்தவருக்கான பிரிவில் 10,053 பேர், விளையாட்டுப் பிரிவில் 701 பேர், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 84 பேர், தொழிற்கல்வி பிரிவில் 1,900 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டது. தரவரிசை பட்டியலில் திவ்யா, சர்மிளா, மயூரன், நவீனா ஆகியோர் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்து பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர். 8 பேர் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in