

சென்னை: கல்லூரிகளில் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின்(ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“கல்வி நிறுவன வளாகங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அதன்படி தங்கள் வளாகங்களில் தீ பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
அதன்படி அனைத்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் தகுதியான அதிகாரிகளிடம் இருந்து சரியான தீ பாதுகாப்பு சான்றிதழை கட்டாயம் பெற வேண்டும். இது தவிர தீயை அணைக்கக் கூடிய கருவிகள், அதற்கான எச்சரிக்கை அமைப்புகள் இருக்கிறதா என்பதையும உறுதிசெய்ய வேண்டும்.
தீ விபத்துகளை தடுக்க மின் அமைப்புகள், வயரிங் மற்றும் உபகரணங்களை நிறுவனங்கள் தவறாமல் ஆய்வுசெய்து பராமரிக்க வேண்டும். குறிப்பாக, ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உட்பட தீப்பற்றும் பொருட்களை பாதுகாப்பாக கையாள்தல் போன்ற வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.