

சென்னை: பள்ளியிலேயே ஆதார் சேவை வழங்குவதற்கான முகாம் நேற்று தொடங்கியது. இதன்மூலம் வரும் கல்வி ஆண்டில் 60 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அனைத்து விதமான கல்வி உதவி தொகை, ஊக்கத் தொகை, நலத்திட்டங்களை பெறுவது, வங்கி கணக்குகள் தொடங்குவது, மேற்படிப்புக்கு விண்ணப்பம் செய்வது போன்ற சேவைகளுக்கு ஆதார் எண் அவசியமாகிறது.
பள்ளி குழந்தைகள் இந்த சேவைகளை எவ்வித தடையும் இன்றி எளிதில் பெறுவதற்காக ‘பயிலும் பள்ளியிலேயே ஆதார்’ என்ற திட்டத்தை கோவை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தொடங்கிவைத்தார்.
இத்திட்டம்மூலம் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆதார் எண் இல்லாத மாணவ, மாணவிகள் புதிய ஆதார் எண் பெறுதல், ஏற்கெனவே ஆதார் எண் உள்ளவர்களுக்கு பயோமெட்ரிக் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை பள்ளியிலேயே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்மூலம் 48 ஆயிரம் பள்ளி குழந்தைகளுக்கு பள்ளியிலேயே ஆதார் சேவை வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, வரும் புதிய கல்வி ஆண்டில் 60 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் மற்றும் புதிய ஆதார் பதிவு சேவைக்காக அவர்களது பள்ளியிலேயே முகாம்அமைக்கப்பட்டு, இச்சேவை தொடர்ந்து வழங்கப்படும். இந்தமுகாம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்காக, தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலம் 414 கல்வி வட்டாரங்களிலும் 770 ஆதார் பதிவாளர்களை தேர்வு செய்து, 770 ஆதார் பதிவு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்வி வட்டாரங்களில் உள்ள மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு சென்று, அங்கு முகாம் அமைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு கட்டணம் இல்லாமலும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்திய தனித்துவ ஆணையம் நிர்ணயம் செய்துள்ள கட்டணத்துடனும் புதிய ஆதார் பதிவு மற்றும் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் போன்ற சேவைகளை வழங்குவார்கள்.
இத்திட்டம் மூலம் வரும் (2024-25) கல்வி ஆண்டில் 60 லட்சம் பள்ளி மாணவர்களும், அடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டிலும் 16 லட்சம் முதல் 18 லட்சம் பேர் வரையும் பயன்பெறுவார்கள்.
மேலும், 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அவர்களது பள்ளி வளாகத்திலேயே அஞ்சல் கணக்கு தொடங்கும் பணிக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் 45,917 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 66.30 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.