

சென்னை: தேசிய யோகா ஒலிம்பியாட் போட்டிகள் மைசூரில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
வரும் கல்வியாண்டுக்கான (2024-25) அனைத்து அரசு, அரசுஉதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேசிய அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டிகள் ஜூன் 18 முதல் 20-ம் தேதி வரைகர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டிகளை நடத்த வேண்டும்.
அதன்படி வட்டார, மாவட்ட,மாநில அளவிலான யோகா ஒலிம்பியாட் தேர்வுப் போட்டிகளை முறையே ஜூன் 8, 11, 14 ஆகிய தேதிகளில் நடத்தப்பட வேண்டும். இதில் மாநில அளவிலான போட்டிகள் மதுரையில் நடைபெறும். இதுதவிர 10 முதல் 14 வயது மற்றும் 14முதல் 16 வயது ஆகிய பிரிவுகளில் போட்டிகள் அமைய வேண்டும்.
மேலும், மாநில அளவிலானபோட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மைசூரில் நடைபெறும் தேசிய யோகா ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் செயல்பட வேண்டும்.