720-க்கு 720... நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்ற விழுப்புரம் மாணவர் ரஜனீஷ்!

நீட் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதை இனிப்புகள் வழங்கி கொண்டாடும் ரஜனீஷ் குடும்பத்தினர்.
நீட் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதை இனிப்புகள் வழங்கி கொண்டாடும் ரஜனீஷ் குடும்பத்தினர்.
Updated on
1 min read

விழுப்புரம்: ‘நீட் தேர்வுக்கு சிறப்புப் பயிற்சி பெற்றேன். மருத்துவத்தில் இதயவியல் அறுவை சிகிச்சை மருத்துவராக ஆக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு’ என்று நீட் தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்ற விழுப்புரம் மாணவர் ரஜனீஷ் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப் பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, வரும் 2024-25-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 557 நகரங்களில் 3 ஆயிரத்துக்கும் மேலான தேர்வு மையங்களில் நடைபெற்றது.இத்தேர்வை தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 200 தேர்வு மையங்களில் 1.3 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இத்தேர்வில் நாடு முழுவதும் 13.16 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய அளவில் தமிழகத்தில் 8 பேர் உட்பட 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இதில், விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சார்ந்த ரயில்வே ஊழியரான பிரபாகரன் என்பவர் மகன் ரஜனீஷும் 720-க்கு 720 மதிப்பெண் பெற்றுள்ளார். இது குறித்து ரஜனீஷ் பேசியதாவது, “சிறுவயதிலிருந்தே மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவுகளோடு படித்தேன். 10-ம் வகுப்பில் 482 மதிப்பெண்களும், பிளஸ் டூ-வில் 490 மதிப்பெண்களும் எடுத்தேன். நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு சிறப்புப் பயிற்சி பெற்றேன். மருத்துவத்தில் இதயவியல் அறுவை சிகிச்சை மருத்துவராக ஆக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in