பொறியியல் கலந்தாய்வுக்கு எத்தனை இடங்கள்? - ஜூலை 2வது வாரத்தில் பட்டியல்

பொறியியல் கலந்தாய்வுக்கு எத்தனை இடங்கள்? - ஜூலை 2வது வாரத்தில் பட்டியல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என470-க்கும் மேற்பட்ட பொறியியல்கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அந்த வகையில், கடந்த ஆண்டு 474 கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் இடங்கள் கிடைத்தன.

இந்நிலையில், இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வில் எத்தனை கல்லூரிகள் பங்கேற்கும்? அவற்றில் இருந்து எத்தனை இடங்கள் கிடைக்கும்? என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையே, வரும் கல்வி ஆண்டு பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிவிட்டது. விண்ணப்பப்பதிவு ஜுன் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது.

அதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு, தரவரிசை பட்டியல் வெளியீடு, ஆன்லைன் கலந்தாய்வு, ஒதுக்கீட்டு ஆணை என அடுத்தடுத்து பணிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு எத்தனை இடங்கள்கிடைக்கும் என்பது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமனிடம் கேட்டபோது, பொறியியல் கல்லூரிகளுக்கான இணைப்பு அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வழங்குகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் புதிய கல்லூரிகள் மற்றும் புதிய இடங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படலாம்.

எனவே, அங்கீகாரம் வழங்கும்பணி முடிந்து ஜூலை 2-வது வாரத்தில் பொறியியல் கல்லூரிகளின் விவரம் மற்றும் அங்குள்ள பிஇ,பிடெக் இடங்கள் குறித்த பட்டியலைத் தருவதாக அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு பொது கலந்தாய்வுக்கு 2 லட்சத்து 20 இடங்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு கல்லூரிகள் மற்றும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா என்பது அண்ணா பல்கலைக்கழகம் அளிக்கும் பட்டியலுக்குப் பிறகே தெரிய வரும் என்றார்.

இதற்கிடையே, கடந்த ஆண்டில் மாணவர் சேர்க்கைமிகவும் குறைவாக இருந்ததால்11 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை என்றும், மாணவர் சேர்க்கை குறைவு காரணமாக 4 கல்லூரிகள் இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்து விட்டதால் மொத்தம் 15 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இருக்காது என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in