தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு பாடநூல்கள் விநியோகம்: பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடநூல்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 44 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில்1 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார்75 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கான பாடநூல்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள்கழகம் மேற்கொண்டு வருகிறது.

அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

அதன்படி வரும் (2024-25) கல்வியாண்டுக்காக மொத்தம் 4.18 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதாவது, அரசு, அரசு உதவி பள்ளி மாணவர்களுக்கு வழங்க 2.9 கோடி புத்தகங்கள், தனியார் பள்ளிகள் விற்பனைக்காக ரூ.1.2 கோடி புத்தகங்கள் ஆகும். தற்போது பாடநூல்களை பள்ளிகளுக்கு விநியோகம் செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் ஜூன் முதல் அல்லது 2-வது வாரத்தில் திறக்கப்பட உள்ளன.

பள்ளிகள் திறந்தவுடன் முதல் வாரத்துக்குள் 1 முதல் 7-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல் பருவ பாடப் புத்தகங்களும் ,8 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான முழு புத்தகங்களும் வழங்கப்படும். அதற்கேற்ப தயார் நிலையில் இருக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் அச்சிடப்பட்ட பாடநூல்கள் குடோன்களில் இருந்து அந்தந்த மாவட்டக் கல்விஅலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து பள்ளிகளுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

இதுதவிர தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள் விற்பனை கடந்த மே 15-ம் தேதிதொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அடையாறு பாடநூல் விற்பனை கிடங்கு ஆகியவற்றில் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். இதேபோல், தமிழ்நாடு காதிக நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட நோட்டுப் புத்தகங்களும் முழுமையாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது’’என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in