தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: 1.30 லட்சம் பேர் விண்ணப்பம்

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: 1.30 லட்சம் பேர் விண்ணப்பம்
Updated on
1 min read

சென்னை: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்காக இந்த ஆண்டு 1.30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இலவச கட்டாய கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதும் உள்ள 7,283 தனியார் பள்ளிகளில் சுமார் 80,000 இடங்கள் உள்ளன.

இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது 1-ம் வகுப்பில் சேர்பவர்கள் 8-ம் வகுப்பு வரை இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் கடந்த 2013-ல் அமலான ஆர்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை 4.60 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்துள்ளனர்.

இதற்கிடையே, வரும் கல்வி ஆண்டு (2024-25) இலவச மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 22-ல் தொடங்கி மே 20-ம் தேதி வரை நடந்தது. இந்த ஆண்டு சுமார் 1.30 லட்சம் பேர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் மே 28-ம் தேதி வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மே 29-ல் பெயர் வெளியீடு: இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் மே 29-ம் தேதி இணையத்தில் வெளியிடப்படும்.

சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தகவல் அனுப்பப்படும். அதன்பிறகு, பெற்றோர் தங்கள் குழந்தைகளை சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்கலாம்.

இதுபற்றிய கூடுதல் விவரங்களை rte.tnschools.gov.in எனும் இணையதளத்தில் அறியலாம். இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், பள்ளிக்கல்வி உதவி மையத்துக்கு ‘14417’ என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in