Last Updated : 03 Apr, 2018 11:02 AM

 

Published : 03 Apr 2018 11:02 AM
Last Updated : 03 Apr 2018 11:02 AM

படிப்போம் பகிர்வோம்: புத்தக வடிவில் ஓர் ஆவணம்!

 

லக வரைபடத்தில் இந்தியா எங்கு இருக்கிறது என்பதை ஒரு குழந்தை தெரிந்துகொள்வதற்கு முன்பாகத் தன் உடலைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது கோபி ஷங்கர் எழுதியிருக்கும் ‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ புத்தகம். காமன்வெல்த் நாடுகளின் விருது பெற்ற இடையிலிங்கத்தவரான (Inter sex person) கோபி ஷங்கர், அயல் நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் மன்றங்களிலும் பால், பாலினம், பாலியல் ஒருங்கிணைவு குறித்து நிகழ்த்திய சொற்பொழிவுகள், சமர்ப்பித்த ஆராய்ச்சிக் கட்டுரைகள், மாற்றுப் பாலினப் பிரமுகர்கள் பலரின் விரிவான பேட்டிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்தப் புத்தகம்.

2015-ல் கோபி இந்திய நாடாளுமன்றத்துக்கு மாற்றுப் பாலினத்தவர் மசோதா தாக்கல் செய்ய சாட்சிக்காக அழைக்கப்பட்டவர். ஏற்கெனவே இவருடைய சில கட்டுரைகள் வர்ஜினியா பல்கலைக்கழக சமூகவியல் பாடத்திட்டத்தில் இடம்பெற்றவை. தற்போது ‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ நூலிலிருந்து சில பகுதிகள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை மற்றும் இளமுனைவர் ஆராய்ச்சிக்குப் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு இடம்பெறவிருக்கிறது.

இருமைக் கொள்கை சரியா?

பிறந்த குழந்தை ஆணாக இருந்தால் நீலவண்ணத் தொட்டிலில் வைப்பது, பெண் என்றால் இளஞ்சிவப்பு தொட்டிலில் வைப்பதில் தொடங்கி இந்த இரண்டு பாலினங்களைச் சேர்ந்தவர்களின் பார்வையை ஒட்டியே மருத்துவம், அறிவியல், வரலாறு எல்லாம் எழுதப்படுவது சரியா என்னும் கேள்வி இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்தைப் படித்து முடிக்கும்போதும் நம்முள் இயல்பாக எழுகிறது. பெண்னைக் குறிக்கும் XX குரோமோசோம், ஆணைக் குறிக்கும் XY குரோமோசோம் இவை தவிரவும் பல சேர்க்கைகளில் குரோமோசோம்கள் மனிதர்களை தீர்மானிக்கின்றன்.

ஆணுக்குப் பெண் மீதும் பெண்ணுக்கு ஆண் மீதுமான ஈர்ப்பைத் தவிரப் பல்வேறு விதமான ஈர்ப்புகளைக் குறிக்கும் பாலினங்கள் இருப்பதாக இந்நூலில் குறிப்பிடுகிறார் கோபி ஷங்கர்.

திருநர், திருநங்கை, திருநம்பி, பால்புதுமையர், பால் நடுவர், முழுநர், இருநர், திரிநர், பாலிலி, திருநடுகர், மறுமாறிகள், தோற்றப் பாலினத்தவர், முரண் திருநர், மாற்றுப்பால் உடையணியும் திருநர், இருமை நகர்வு, எதிர் பாலிலி, இருமைக்குரியோர், இடைபாலினம், மாறுபக்க ஆணியல், மாற்றுப்பக்க பெண்ணியல், அரைப்பெண்டிர், அரையாடவர், நம்பி ஈர்ப்பனள், நங்கை ஈர்ப்பனள், நங்கை ஈர்ப்பனன், பால் நகர்வோர், ஆணியல் பெண், பெண்ணன், இருமையின்மை ஆணியல், இருமையின்மை பெண்ணியல் என நீள்கிறது அந்தப் பட்டியல்.

இந்தப் பட்டியலில் இருக்கும் பாலினங்களுக்குப் புராணம், வரலாறு, உலகின் பல நாடுகளில் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களை உதாரணங்களாக நம் முன் நிறுத்துகிறார். பால்புதுமைக்குப் புராண உதாரணமாக மதுரையை ஆண்ட மீனாட்சியின் கதையைச் சொல்கிறார்.

ஆசிய நாடுகளின் எந்தவொரு கலாச்சாரமோ தத்துவமோ ஒருபால் ஈர்ப்புடையவர்களையோ பால் சிறுபான்மையினரையோ பாலியல் சிறுபான்மையினரையோ தூக்கில் இட வேண்டும் என்றோ கொல்ல வேண்டும் என்றோ சொல்லவில்லை. மறுபுறம் அவர்களை அங்கீகரித்ததும் இல்லை என்பதை விரிவான ஆய்வின் வழியாக இப்புத்தகம் பதிவுசெய்திருக்கிறது.

இடையிலிங்கத்தவரின் நிலை

பிறக்கும்போதே ஆண் இனப்பெருக்க உறுப்போ பெண் இனப்பெருக்க உறுப்போ முழுமையாக வளர்ச்சியடையாமல் இருபாலின இனப்பெருக்க உறுப்புகள் ஒருங்கே அமைந்த குழந்தைகளை ‘இடையிலிங்கம்’ (இன்டர் செக்ஸ்) என்றழைக்கிறார்கள். எண்ணற்ற இடையிலிங்கக் குழந்தைகள் கொல்லப்படுவது இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. இடையிலிங்க நிலையால் ஒடுக்கப்பட்ட இந்திய விளையாட்டு வீராங்கனைகள், மருத்துவப் பரிசோதனை என்னும் பெயரால் அவர்களுக்கு இழைக்கப்படும் அவலங்களை விவரிக்கும் அதிர்ச்சிப் பக்கங்களும் இதில் உள்ளன.

பெண் சக்தி

உலக அளவில் தவிர்க்க முடியாத சமூகப் போராளியாக உருவெடுத்திருக்கும் இர்ஷாத் மஞ்சி குறித்த கட்டுரை, மாற்றுப் பாலினத்தவரின் அணுகுமுறை சமூகத்தில் எப்படியிருக்க வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்? மாற்றுப் பாலினத்தவரின் கருத்துகளை எதிர்ப்பவர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் எப்படி ஆணித்தரமாக முன்வைக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது. அதேபோல, இந்திய தண்டனைச் சட்டம் 377 சட்டப் பிரிவுக்கு எதிராகப் போராடிவரும் ‘நாஸ்’ அறக்கட்டளையின் நிறுவனர் அஞ்சலி கோபாலன் உடனான பேட்டியும் கவனத்துக்குரியது.

பெரும்பான்மைதான் சரியா?

பெரும்பான்மையாக உள்ள விஷயத்தைப் பின்பற்றும் மக்கள், சிறுபான்மையாகச் சிலர் பின்பற்றும் விஷயங்களை விசித்திரமாகவும் பாகுபாடோடும் அணுகுவது எப்படி உலக இயல்பாக ஆகியிருக்கிறது என்பதையும், மாறாத அத்தகைய கருத்துகளை மாற்றிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதையும் இந்நூல் உரக்கச் சொல்கிறது. பால்புதுமை சமூகம் தொடர்பாக இத்தகைய தவறான கருத்துகள் சமூகத்தில் நிலவுவதையும் அத்தகைய கருத்துகள் பால்புதுமையினருக்கு உள்ளேயே பலவித முரண்பாடுகளை ஏற்படுத்துவதையும் கோபி குறிப்பிடுகிறார்.

அறிவியல் என்ன சொல்கிறது?

பலவிதமான ஈர்ப்புகள் குறித்து அறிவியலின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பதையும் ஒரு கட்டுரை விளக்குகிறது. “ஒருபால் ஈர்ப்புக்கான முழுமையான காரணத்தை இன்னும் யாராலும் அதிகாரபூர்வமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவரின் மரபணுக்களைக் கருவில் இருக்கும்போது மாற்றும் திறனும், குழந்தை பிறந்தபின் மரபணுக்களின் வெளிப்பாட்டைத் தீர்மானிக்கும் திறனும் கொண்ட EPI Marks கருப்பையில் இருக்கும். பாலினம் தொடர்பான மாற்றங்களை EPI Marks உண்டாக்கும் என்பதை ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளார்கள்” என்னும் தகவலும் உள்ளது.

ஹிட்லர் வெறுத்த இருவர், அலெக்ஸாண்டரின் தன்பாலின ஈர்ப்புளவர் மீதான காதல், மைக்கேல் ஏஞ்சலோவின் மறைக்கப்பட்ட காதல் கடிதங்கள், தன்பால் உறவாளரான மகனின் தாய்க்கு, ‘உங்கள் மகனின் இந்த உணர்வு இயல்பானதுதான்’ என்பதை விளக்கி சிக்மண்ட் ஃபிராய்ட் எழுதிய கடிதம்… எனப் பாலினச் சிறுபான்மையினர் உலக அளவில் சந்தித்த, சந்திக்கும் பிரச்சினைகள், எங்கெல்லாம் நிலைமை மாறியிருக்கிறது, ஆங்கிலேயர்கள் காலத்தில் போட்ட 377-வது சட்டப் பிரிவு அந்த நாட்டிலேயே இல்லை எனும் விவரம், மாற்றுப் பாலினத்தவரின் உரிமைகளில் மதமும் அரசியலும் எப்படிப் பின்னிப் பிணைந்து செயல்படுகின்றன என்பதையும் நம் கண்முன் நிறுத்துகின்றன, நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள்.

book-2a

‘மறைக்கப்பட்ட பக்கங்க’ளைப் படிப்பதன் மூலம் ‘நம் உடல் நம் உரிமை’ என்னும் கருத்து நிச்சயம் வெளிச்சத்துக்கு வரும்!

மறைக்கப்பட்ட பக்கங்கள் - பால், பாலினம், பாலியல் ஒருங்கிணைவு

கோபி ஷங்கர்

விலை : ரூ.250

கிழக்கு பதிப்பகம், சென்னை -14.

தொடர்புக்கு:

044 - 4200 9603

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x