‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ | வேகமாக வளரும் பயோ-டெக்னாலஜி, பயோ-மெடிக்கல் துறைகள்

‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ | வேகமாக வளரும் பயோ-டெக்னாலஜி, பயோ-மெடிக்கல் துறைகள்
Updated on
1 min read

சென்னை: இந்தியாவில் பயோ-டெக்னாலஜி, பயோ-மெடிக்கல் துறைகள் வேகமாக வளர்ந்து வருவதாக ஆன்லைன் தொடர் வழிகாட்டி நிகழ்வில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ என்ற நிகழ்ச்சி ஆன்லைன் வழியாக நடைபெற்றது. இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி, சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி மற்றும் ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்கின.

கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஆன்லைன் வழிகாட்டி 9-வது தொடர் நிகழ்வில் ‘பயோ டெக் & பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங் படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பில் துறைசார் வல்லுநர்கள் உரையாற்றினர். அவர்கள் பேசியதாவது:

ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் முதல்வர் டாக்டர் பி.செளம்யா: டெக்னாலஜி என்பது ஒரு பொருளை உருவாக்குவது. இன்ஜினீயரிங் என்பது அதற்கான டிசைனை உருவாக்குவது. இந்த இரண்டுமே மனித குலத்துக்கு என்றும் பயனளிக்கும் துறைகளாக உள்ளன. ஆரோக்கியமான சுகாதாரத்துக்கு பயோ டெக்னாலஜி மற்றும் பயோ மெடிக்கல் ஆகிய இரண்டு துறைகளுமே மிகுந்த உதவியாக உள்ளன.

கோவை பாரதிதாசன் பல்கலைக்கழக டிஐஏ சிறப்பு மைய கூடுதல் இயக்குநர் டாக்டர் கே.கதிர்வேலு: பயோ டெக்னாலஜி மற்றும் பயோ மெடிக்கல் ஆகிய இரு துறைகளுமே நம் நாட்டில் வேகமாக வளர்ந்து வருகின்றன. குறிப்பாக, கோவிட் பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு இந்த துறைகள் குறித்த தெளிவும், விழிப்புணர்வும் மக்களிடம் அதிகம் ஏற்பட்டுள்ளன.

நிகழ்வை ஒருங்கிணைத்த ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு: பயோ டெக்னாலஜி துறையின் ஒரு பகுதியாக விளங்கும் பயோ டாய்லெட் எனப்படும் உயிரி கழிப்பறை, உயரமான மலைச் சிகரங்களில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் கழிவுகளை, சூழலியலுக்குப் பாதிப்பில்லாத வகையில் வெளியேற்றுவதற்கு உதவியாக அமைந்துள்ளன. உயிரி கழிப்பறை தொழில்நுட்பம் ராணுவத்தோடு நின்றுவிடாமல், தமிழகத்தில் பள்ளிகள் வரை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://www.htamil.org/UUKE09 என்ற லிங்க்-ல் பார்த்துப் பயனடையலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in