

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தாய், மகன் இருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம் (43). இவர், செய்யாறில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நித்யா (34). இவர், கோவிலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்ட தற்காலிக சமையலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (15). இவர், கோவிலூரில் உள்ள வி.ஆர்.சி.கே.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் 9-ம் வகுப்பு வரை படித்திருந்த நித்யா அரசு வேலை வாய்ப்பு பெறும் நோக்கில் 10-ம் வகுப்பு தேர்வெழுத முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து, அவர் தனித் தேர்வராக தேர்வு எழுத விண்ணப்பித்தார். மேலும், தேர்வுக்காக வந்தவாசியில் உள்ள தனியார் கல்வி மையத்தில் 10-ம் வகுப்பு பாடம் பயின்றார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை தாய், மகன் இருவரும் எழுதினர்.
இதில், தாய் நித்யா மொத்தம் 500-க்கு 274 மதிப்பெண்களும், சந்தோஷ் 300 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து, வந்தவாசி கல்வி மையத்துக்கு நேற்று காலை வந்த நித்யா, சந்தோஷ் ஆகிய இருவரையும், கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் பாராட்டினார்.