அரசுப் பள்ளி ஆசிரியர்களை அமைச்சு பணிகளை செய்ய வற்புறுத்த கூடாது: பள்ளி கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளி ஆசிரியர்களை அமைச்சு பணிகளை செய்ய வற்புறுத்த கூடாது: பள்ளி கல்வித் துறை உத்தரவு
Updated on
1 min read

சென்னை: பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘முதுநிலை ஆசிரியர்களின் பணப்பலன் சார்ந்த அறிக்கை தயாரித்தல் மற்றும் அதுசார்ந்த அமைச்சுப் பணிகளை அந்த ஆசிரியரே தயாரித்து கொடுத்தால் மட்டுமே பெற்று தரப்படுகிறது. அவ்வாறு அந்த ஆசிரியர்கள் செய்யவில்லை எனில் அவரது விண்ணப்பம் கிடப்பில் போடப்படுகிறது. இதை நிவர்த்தி செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை முறையாக பரிசீலனை செய்து தாமதமின்றி தலைமை ஆசிரியருக்கு கோப்புகளை சமர்ப்பிக்க உதவவேண்டும்.

உதவியாளர் தனிப் பதிவேடு, படிவம் 7, ஆய்வுக் குறிப்பு ஆகியவற்றை மாதந்தோறும் 5-ம் தேதிக்குள் தலைமை ஆசிரியரிடம் முன்னிலைப்படுத்த வேண்டும். இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆய்வின்போது ஆசிரியர்கள் விண்ணப்பம் நடவடிக்கை இன்றி கிடப்பில் போடப்பட்டிருந்தால், சார்ந்த பள்ளியின் இடைநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு கருத்துருக்களை தயார் செய்வது குறித்து புத்தாக்க பயிற்சி வழங்க வேண்டும். அவர்களது பணியிடம் காலியாக இருந்தால் அருகே உள்ள பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களை மாற்று பணிபுரிய ஆணை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in