தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யில் முதுகலை, பிஹெச்டி படிப்பில் சேர வெளிமாநில மாணவர்கள் ஆர்வம்
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, பிஹெச்டி படிப்பில் சேர வெளிமாநில மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து, வேளாண்மைப் பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள 11 கல்வி வளாகங்களில் 33 துறைகளில் முதுகலை படிப்பும், 28 துறைகளில் பிஹெச்டி படிப்பும் வழங்கப்படுகிறது. கடந்த 2023-ம் ஆண்டில் முதுகலை படிப்பில் 487 பேரும், பிஹெச்டி படிப்பில் 147 பேரும் சேர்ந்தனர். இந்திய அளவில் பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு அடுத்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2-ம் இடத்தில் உள்ளது.
கடந்த 2020-ல் 8-ம் இடத்தில் இருந்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2023-ம் ஆண்டு தர வரிசை பட்டியலில் இந்திய அளவில் 2-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, பிஹெச்டி படிப்புகளில் சேர வெளி மாநில மாணவர்கள் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.
குறிப்பாக, ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட இதர மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர். ஆராய்ச்சிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு முதுகலை படிப்புக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.10 ஆயிரமும், பிஹெச்டி படிப்புக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்படுகிறது என்றனர்.
