முன்னாள் மாணவர்கள், பெருநிறுவனங்கள் மூலம் சென்னை ஐஐடி-க்கு ரூ.513 கோடி நிதியுதவி: இயக்குநர் தகவல்

முன்னாள் மாணவர்கள், பெருநிறுவனங்கள் மூலம் சென்னை ஐஐடி-க்கு ரூ.513 கோடி நிதியுதவி: இயக்குநர் தகவல்
Updated on
1 min read

சென்னை: சென்னை ஐஐடிக்கு முன்னாள் மாணவர்கள், பெருநிறுவனங்கள் வாயிலாக கடந்த நிதி ஆண்டில்ரூ.513 கோடி நிதியுதவி கிடைத்ததாகவும் அதன்மூலம் ஏராளமான கல்வி, ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் இயக்குநர் வி.காமகோடி தெரிவித்தார்.

இது தொடர்பாக ஐஐடி இயக்குநர் காமகோடி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஐஐடி-யின் வளர்ச்சிக்கும் ஆராய்ச்சி பணிகளுக்கும் ஐஐடிமுன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை பல்வேறு வகைகளில் நிதியுதவி செய்து வருகிறது. கடந்த நிதி ஆண்டில் (2023-2024) முன்னாள் மாணவர்கள், பெருநிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் மூலமாக ரூ.513 கோடி கிடைக்கப்பெற்றது. இதில் ரூ.368 கோடி முன்னாள் மாணவர்கள் வழங்கியுள்ளனர். பெருநிறுவனங்களின் சிஎஸ்ஆர் மூலம் ரூ.95.53 கோடி கிடைத்தது.

முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது சென்ற நிதி ஆண்டில் 135 சதவீதம் அளவுக்கு நிதியுதவி உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டுக்கு (2024-2025) ரூ.717.8 கோடி கிடைக்கும் வகையில் புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதில் ரூ.200 கோடி அளவுக்கு நிதி பெறப்பட்டுவிட்டது. இதன் மூலம் பலவேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஐஐடியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிஎஸ் புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ், பிஎஸ் எலெக்ட்ரானிக் சிஸ்டம் ஆகிய இரு ஆன்லைன் பட்டப்படிப்புகளில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். இப்படிப்புகளில் சேரும் குறைந்த வருமானம் உள்ளோருக்கு பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு புதிதாக பிடெக் ஆர்ட்டிபிசியல் இண்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் என்ற படிப்பை அறிமுகப்படுத்துகிறோம். இதில் மொத்தம் 50 இடங்கள் உள்ளன. ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இதற்கான சேர்க்கை நடைபெறும். இப்படிப்பை முடிப்போருக்கு வேலைவாய்ப்புகள் மிகுதியாக உள்ளன.

இவ்வாறு காமகோடி கூறினார்.

ஐஐடி டீன் (சர்வதேச உறவுகள்) மகேஷ் பஞ்சக்னுல்லா ஐஐடிக்கு கிடைக்கப்பெரும் நிதியுதவியைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை எடுத்துரைத்தார். ஐஐடி முன்னாள் மாணவர் அறக்கட்டளையின் தலைவர் வி.ஷங்கர் அதன் செயல்பாடுகளை விளக்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in