Published : 09 May 2024 04:21 AM
Last Updated : 09 May 2024 04:21 AM

‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ | பண்டைய வரலாற்றை தொல்லியல் ஆய்வுகள் மூலமே கண்டறியலாம்: துறை வல்லுநர்கள் தகவல்

சென்னை: நம் பண்டைய வரலாற்றை தொல்லியல் ஆய்வுகள் மூலமே கண்டறியலாம் என்று விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் தொடர் வழிகாட்டி நிகழ்வில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெற்றது. இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் காலேஜ், சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்கின. கடந்த ஞாயிறு (மே 5) நடைபெற்ற ஆன்லைன் வழிகாட்டி 7-வது தொடர் நிகழ்வில் ‘ஆர்க்கியாலஜி கோர்சஸ் & வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில் துறைசார் வல்லுநர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக மெரிடைம் ஹிஸ்ட்ரி அண்ட் மரைன் ஆர்க்கியாலஜி துறை இணைப்பேராசிரியர் வி.செல்வகுமார்: தொல்லியல் என்பது வரலாற்றுடன் தொடர்புடைய ஒரு பாடப்பிரிவாகும். தொல்லியலுக்கு உள்ளேயும் நிறைய பாடப்பிரிவுகள் உள்ளன. மனிதர்கள் முதன்முதலில் உருவாக்கிய பொருள்களிலிருந்து நம் வரலாற்றைக் கண்டறியும் முயற்சியே தொல்லியலாகும்.

ஏஎஸ்ஐ சூப்பிரன்டெண்டிங் ஆர்க்கியாலஜிஸ்ட் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா: பல்லாண்டுகால கள ஆய்வின் மூலமாகவும், கட்டுமானப் பணிகளின்போதும் எதேச்சையாகக் கிடைக்கும் பொருள்களின் வழியாகவும்கூட ஒரு இடத்தில் தொல்லியல் ஆய்வை மேற்கொள்ளலாம். அறிவியல்ரீதியாகவும் சில இடங்களைக் கண்டுபிடித்து, அங்கே அகழாய்வு செய்துநம் பழமையைக் கண்டறியலாம்.

நிகழ்வை ஒருங்கிணைத்த ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு: கடந்த காலத்தைக் கட்டிப்பிடித்து இழுத்து வந்து, நிகழ்காலத்தில் நிறுத்திப் பார்க்கும் மீள்பார்வை மனிதர்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். தேசத்தின் கடந்தகால வரவாற்றை, பண்டைய மக்களின் வாழ்வியலைக் கண்டறிந்து, ஆராய்ந்து, ஆவணப்படுத்தி, பாதுகாத்து, காட்சிப்படுத்தும் துறையே தொல்லியல் துறையாகும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://www.htamil.org/UUKE07 என்ற லிங்க்கில் பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x