

திருநெல்வேலி: “பி.காம் முடித்துவிட்டு சிஏ படிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்” என நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னத்துரை தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த முனியாண்டி - அம்பிகாபதி தம்பதியரின் மகன் சின்னத்துரை. மகள் சந்திரா. இவர்கள் இருவரும் வள்ளியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர். சாதிய வன்கொடுமையால் சக மாணவர்கள் உள்ளிட்ட சிறுவர்கள் சின்னத்துரையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதைத் தடுக்க முயன்ற சின்னத்துரையின் சகோதரி சந்திராவையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதைப் பார்த்த அதிர்ச்சியில் சின்னத்துரையின் தாத்தா கிருஷ்ணன் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சின்னத்துரை, அவரது சகோதரி ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர். கொலையில் தொடர்புடைய சக மாணவர்கள் உள்ளிட்ட 6 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.
பிளஸ் 2 பயின்று வந்த மாணவர் சின்னத்துரைக்கு அவரது ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு சென்று பாடங்களை கற்றுக் கொடுத்தனர். மேலும், மருத்துவமனையில் இருந்தபடியே உதவியாளர் மூலம் அரையாண்டு தேர்வை எழுதினார்.
இந்த நிலையில், அவர்களது குடும்பத்தினர் நாங்குநேரியில் வசித்த நிலையில், பாதுகாப்பு இருக்காது என முறையிட்டதால் நாங்குநேரியில் உள்ள அம்பேத்கர் தொடக்கப் பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றிய சின்னத்துரையின் தாயார் ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். சின்னத்துரை பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியிலும், இவரது சகோதரி பாளையங்கோட்டையில் உள்ள மேரி சார்ஜென்ட் பள்ளியிலும் சேர்க்கப்பட்டனர்.
அவர்களது படிப்பு செலவை தமிழக அரசு ஏற்றது. நான்கு மாத சிகிச்சைக்கு பின்னர் பள்ளிக்கு சென்று சின்னத்துரை படிப்பை மேற்கொண்டார். இந்நிலையில், பிளஸ் 2 தேர்வில் மாணவர் சின்னத்துரை 600-க்கு 469 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ்-71, ஆங்கிலம்-93, பொருளாதாரம்-42, கணினி பயன்பாடு-94, கணக்குப்பதிவியல்-85, பொருளாதாரம்-84 வீதம் மதிப்பெண் பெற்றுள்ளார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் சின்னத்துரைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாணவர் சின்னத்துரை கூறும்போது, “மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஆசிரியர்கள் நேரில் வந்து பாடங்களை கற்றுக் கொடுத்தனர். மருத்துவர்களும் நல்ல முறையில் கவனித்துக்கொண்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடியே ஆசிரியர் உதவியுடன் அரையாண்டு தேர்வை எழுதினேன். சிகிச்சை முடிந்து பள்ளிக்கு சென்றபோதும் ஆசிரியர்கள், சக மாணவர்கள் என்னை ஊக்கப்படுத்தினர். எனது படிப்பில் ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தினர். இனி பி.காம் முடித்துவிட்டு சிஏ படிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்” என்றார்.