Published : 04 May 2024 08:15 AM
Last Updated : 04 May 2024 08:15 AM

விஐடி பி.டெக். பொறியியல் படிப்பு சேர்க்கை முடிவு வெளியீடு: முதல்கட்ட கலந்தாய்வு மே 7-ம் தேதி தொடக்கம்

விஐடி பல்கலைக்கழக பி.டெக். பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்கள்.

வேலூர்: வேலூர் விஐடி பல்கலை.யில் 2024-25 கல்வியாண்டுக்கான பி.டெக். பொறியியல் நுழைவுத் தேர்வு, இந்தியாவில் 125 நகரங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் கணினி முறையில் நடைபெற்றது. இதன் முடிவுகள் https://ugresults.vit.ac.in/viteee மற்றும் www.vit.ac.in. என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

நுழைவுத் தேர்வில் ஹரியாணா ரூபிந்தர் சிங், ராஜஸ்தான் பானு மகேஷ் செக்குரி, ஆந்திரா வேதாந்த் , அசாம் ஆயுசி பெய்த், உத்தர பிரதேசம் சன்வி சிங்க், மகாராஷ்டிரா அபிராஜ் ராம்காந்த் யாதவ், உத்தராகண்ட் சைதன்யா ரமேஷ் போஷ்ரே, உத்தர பிரதேசம் விக்கி குமார் சிங், ஹிமாச்சல பிரதேசம் சோகன் ஹஸ்ரா, பிஹார் சாகில் ஆகியோர் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளனர்.

முதல்கட்ட கலந்தாய்வு வரும் 7-ம் தேதி தொடங்கி, 10-ம்தேதி வரை நடைபெறுகிறது. இதில் தரவரிசையில் 1 முதல் 20,000 வரை இடம் பெற்றவர்கள் பங்கேற்கலாம். அதேபோல, 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 18 முதல் 21-ம் தேதி வரையிலும், 3-ம் கட்ட கலந்தாய்வு வரும் 29 முதல் ஜூன் 1 வரையிலும், 4-ம் கட்ட கலந்தாய்வு ஜூன் 9 முதல் 12-ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

தரவரிசையில் 1 லட்சத்துக்கு மேல் இடம் பெற்ற மாணவர்களுக்கு விஐடி ஆந்திரா மற்றும் போபால் வளாகத்தில் மட்டுமே சேர்க்கை கிடைக்கும். இவர்களுக்கான ‘ஆன்லைன்' கலந்தாய்வு ஜூன் 20, 23-ம் தேதிகள் நடைபெற உள்ளது. வகுப்புகள் ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்கும் .

கல்வி உதவித்தொகை: விஐடி பல்கலை.யின் ஜி.வி. பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், விஐடி நுழைவுத் தேர்வு தரவரிசை அடிப்படையில் 100 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை 4 ஆண்டுகளுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு ‘ஸ்டார்ஸ்’ திட்டத்தின்கீழ் 100 சதவீத கட்டணச் சலுகையுடன், உணவு மற்றும் விடுதி வசதியுடன் கூடிய இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.

மேலும், பி.எஸ்சி. அக்ரி, பி.ஆர்க்., B.Des (Industrial Design) மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை விஐடி இணையதளத்தில் (www.vit.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x