

பல்லாவரம்: நாடு முழுவதும் நீட் தேர்வு மே 5-ம் தேதி நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு (நீட்) எழுத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 488 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கு கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் பள்ளி கல்வித்துறை சார்பில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், செங்கல்பட்டு, சேலையூர், பல்லாவரம் ஆகிய 5 மையங்களில் அரசு சார்ந்து நீட் பயிற்சி 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டது.
மார்ச் 25-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை நடைபெற்ற இந்த நீட் பயிற்சியில் 300 பேர் பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு கடைசி நீட் மாதிரி தேர்வு நேற்று நடந்தது. இதில் 255 பேர் பங்கேற்றனர். இதில்பள்ளிக்கல்வித் துறை மாதிரி வினாத்தாள் அனுப்பிய நிலையில் காலை 9.30-க்கு தொடங்கி தேர்வு மதியம் 12.30 மணி வரை நடந்தது.
நீட் தேர்வில் வழங்கப்படும் ஓ.எம்.ஆர். விடைத்தாள் ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம்720 மதிப்பெண்ணுக்கு 180 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்பட்டது. இந்த தேர்வை நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும்மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினர். ஏற்கெனவே 2 முறை மாதிரி தேர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.