

சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளின் கேள்வித்தாள்களை மாநில மொழிகளில் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கலாம் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வழங்கப்படுகிறது என்றும், எனவே தமிழ் உள்ளிட்ட 22 மாநில மொழிகளிலும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரி மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக பதிலளிக்க மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
அதையேற்று, இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூன் 28-க்கு தள்ளிவைத்துள்ள நீதிபதிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக கேள்வித்தாள்களை மொழிபெயர்ப்பு செய்து அந்தந்த மாநில மொழிகளில் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கினர்.
இந்த மொழிபெயர்ப்பு 70 சதவீதம் சரியாகத்தான் உள்ளது என்றும், அதன்பிறகு அதில் உள்ள குறைபாடுகளை மனிதர்கள் மூலமாக சரி செய்யலாம் எனவும், இந்த விஷயத்தில் மத்திய அரசு நேர்மறையாக பரிசீலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.