

சென்னை: ஜெர்மனி பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, நீர் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச முதுநிலை படிப்பை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடி, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஆச்சென் பல்கலைக்கழகம் மற்றும் டிரெஸ்டென் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, நீர் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய மாற்றம் தொடர்பான சர்வதேச முதுநிலை படிப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆராய்ச்சியுடன் இணைந்த இந்த படிப்பில் இந்திய பொறியியல் பட்டதாரிகளும், வெளிநாட்டு மாணவர்களும் சேரலாம்.
மாணவர்கள் ஐஐடியில் சேர்ந்தாலும் குறைந்தபட்சம் ஒரு செமஸ்டர் காலம் ஆச்சென் பல்கலைக்கழகத்திலும் டிரெஸ்டன் பல்கலைக்கழகத்திலும் படிக்கலாம். ஆராய்ச்சிக் கட்டுரையை தங்கள் விருப்பம்போல் ஐஐடியிலோ அல்லது ஜெர்மனி பல்கலைக்கழகங்களிலோ சமர்ப்பிக்கலாம்.
இந்த புதிய படிப்பு ஜூலை 29-ம் தேதி தொடங்குகிறது. இதில் சேர ஏப்.30-ம் தேதிக்குள் ஆன்லைனில் (https://abcd-centre.org/master-program/) விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த சர்வதேச படிப்பு குறித்து ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறும்போது, பலதரப்பட்ட பாடங்களுடன் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும் வகையில் இப்படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, சர்வதேச சூழலில் நீர் பாதுகாப்பில் ஏற்படும் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கான திறனை வளர்க்கும் வகையில் அமைந்திருக்கும்.
இந்திய மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் இப்படிப்பில் சேரலாம். பன்னாட்டு நிறுவனங்களிலும் அரசு அமைப்புகளிலும் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.