

திருப்பூர்: திருப்பூர் இடுவம் பாளையத்தை சேர்ந்த தாரணி என்ற பல் மருத்துவர் ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 250-வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்தவர் தாரணி. இவரது தந்தை முருகானந்தம். துணிக்கடை நடத்தி வருகிறார். தாயார் சோழன்மாதேவி. அரசுப் பள்ளி ஆசிரியை. பல் மருத்துவப் படிப்பு முடித்த தாரணி கடந்த 4 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ் தேர்வில் பங்கேற்று வந்தார். சிவில் சர்வீஸ் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், 4-வது முயற்சியில் தாரணி வெற்றி பெற்றுள்ளார்.
இது தொடர்பாக தாரணி கூறும் போது, “கரோனா தொற்றின் போது, அதிகாரிகளின் செயல்பாட்டை உன்னிப்பாக கவனிக்க முடிந்தது. வாழ்வில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் அமல்படுத்தியது என்னை வெகுவாக ஈர்த்தது. கடந்த 4 ஆண்டுகளில் தேர்வுக்கு படிக்கத் தொடங்கியதும், பலரிடம் வழிகாட்டுதல்களை பெற்றேன். திறமை அனைவரிடமும் உள்ளது.
அர்ப்பணிப்புடன் உழைத்தால் ஐ.ஏ.எஸ். வெற்றி சாத்தியம். எனது தங்கை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றபோது, மிகுந்த அர்ப்பணிப்புடன் படித்தார். அதை பார்த்து அதே மனோதிடத்துடன் படிக்க வேண்டும் என நினைத்து படித்து இன்றைக்கு தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.