10-ம் வகுப்பு பொதுத் தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் அதிக கவனம் தேவை: முகாம் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடந்தது. சுமார் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபடும் முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்களை தேர்வுத் துறை வழங்கியுள்ளது. அதன் விவரம்:

கடந்த ஆண்டு முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் மதிப்பீடு செய்த விடைத்தாள்களிலேயே மதிப்பெண்களில் அதிக அளவில் வேறுபாடு இருந்தது மறுகூட்டலின்போது கண்டறியப்பட்டது. இது தவிர்க்கப்பட வேண்டும். திருத்துதல் பணிகளில் முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

அதேபோல, கூர்ந்தாய்வு அலுவலர் விடைத்தாள்களை ஆய்வு மட்டுமே செய்ய வேண்டும். உதவிதேர்வாளர் அளித்த மதிப்பெண்களை குறைக்கவோ, மாற்றி அமைக்கவோ அவருக்கு அதிகாரம் இல்லை. விடைத்தாளில் குறைவு அல்லது மாற்றம் கண்டறியப்பட்டால் அதை முதன்மை தேர்வாளரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இதுதவிர, விடைத்தாளில் கூட்டல் பிழை, மதிப்பீடு செய்யாத விடை, மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண் பதிவு செய்யப்படாமல் இருத்தல் போன்ற தவறுகள் இருப்பது தெரியவந்தால், அதற்கு கூர்ந்தாய்வு அலுவலர்தான் முழு பொறுப்பு ஏற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in