குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்த திட்டம்: கல்வி நிறுவனங்களில் விளம்பரப்படுத்த ஏஐசிடிஇ அறிவுறுத்தல்
சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட திட்டம் குறித்து கல்வி நிறுவனங்களில் விளம்பரப்படுத்துமாறு தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஏஐசிடிஇ திட்ட ஆலோசகர் மம்தா ஆர்.அகர்வால் அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
தொலைத்தொடர்பு துறையின் தொழில்நுட்பப் பிரிவாக செயல்பட்டுவரும் தொலைத்தொடர்பு பொறியியல் மையமானது தன்னார்வ சோதனை மற்றும் சான்றிதழ் திட்டத்தின்கீழ் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை தயாரிப்புகளின் தரத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்த சான்றிதழ் வழங்கும் திட்டமானது இந்திய தொலைத்தொடர்பு துறையில் புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் துறையில் புதுமைகளை வளர்க்கவும்,தயாரிப்பு தரத்தை உறுதிப்படுத்தவும், ஆதரவான சூழலை உருவாக்கவும் முடியும்.
இதையொட்டி தொலைத்தொடர்பு பொறியியல் மையமானது தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையில் பதிவு செய்யப்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தில் பதிவு செய்த நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான சோதனை மற்றும் சான்றிதழ்களை கட்டணத்தில் விலக்கு அளித்து தனது ஆதரவை வழங்குகிறது.
எனவே அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தொலைத்தொடர்பு பொறியியல் மையத்தின் தன்னார்வ சோதனை மற்றும்சான்றிதழ் திட்டம் குறித்து விளம்பரப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு dirrectec@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
