படிப்போம் பகிர்வோம்: மாற்றங்கள், விவாதங்களின் மையம்

படிப்போம் பகிர்வோம்: மாற்றங்கள், விவாதங்களின் மையம்
Updated on
3 min read

டங்களே இல்லாத கறுப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்கள் கொண்ட அட்டை; உள்ளே அட்டவணைகள், விவரத் தரவுகளுடன் நீளமான கட்டுரைகள்; இந்தியாவில் உயர்கல்வி நிலையங்கள், ஆராய்ச்சி அமைப்புகள், உயர்கல்வி படித்தவர்களிடம் புகழ்பெற்ற சமூக, அரசியல், பொருளாதார ஆய்விதழ் ‘எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ யின் அடையாளம் இதுதான்.

இந்திய கிராமப்புறச் சமூக மாற்றம், வெளியுறவுக் கொள்கைகள், அரசியல் பிரதிநிதித்துவம், இடதுசாரி அரசியல், மதச்சார்பின்மை, அரசியல் இயக்கங்கள் எனத் தீவிரமான, நீளமான ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட வார இதழாக ஐம்பது ஆண்டுகளை அந்த இதழ் கடந்துவிட்டது. பேராசிரியர்கள், உயர்கல்வி மாணவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றவர்களால் வாசிக்கப்படும், விவாதிக்கப்படும் இந்த இதழில் நோபல் பரிசு வாங்கியவர்கள் முதல் இந்தியாவின் மூலையில் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் ஆய்வாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள்வரை கட்டுரைகள் எழுதுகிறார்கள். இ.பி.டபிள்யூ.வில் கட்டுரை எழுதுபவர்கள் என்றால் ஆய்வு வட்டத்தில் தனிமதிப்பு உண்டு.

10CHSRS_BOOK1 ஆதிவாசிகள் தொடர்பாக வெளியான கட்டுரைகள் தொகுப்பு

இந்தியாவின் அறிவுபூர்வமான உரையாடல்கள், சிந்தனை வளர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் அடையாளமாகவே இ.பி.டபிள்யூ. மாறியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்கள் எம்.எஸ்.எஸ். பாண்டியன், ஜெயரஞ்சன், ஆ.இரா. வேங்கடாசலபதி, வ. கீதா போன்றவர்கள் இ.பி.டபிள்யூ. இதழின் தொடர்ந்த பங்களிப்பாளர்கள். கர்னாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாகூட சமீபத்தில் ‘சமமற்ற இசை’ என்ற கட்டுரையை இ.பி.டபிள்யூ.வில் எழுதினார்.

1966-ம் ஆண்டில் இந்தியாவின் முன்னணி அரசியல் விமர்சகர்கள், அரசு அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் 50 பேர் சேர்ந்து பொருளாதாரம், அரசியலுக்காக ஓர் இதழ் தொடங்கக் கொடையாளர்களிடம் தலா 500 ரூபாய் நன்கொடை கேட்டுத் தொடங்கப்பட்ட இதழ் இது. இதன் முதல் ஆசிரியராக இருந்தவர் பொருளாதார நிபுணர் சச்சின் சவுத்ரி. இதழை நடத்துவதற்காகவே டாக்காவிலிருந்து அவர் பம்பாய்க்கு வந்தார்.

முதலில் இதன் பெயர் ‘தி எகனாமிக் வீக்லி’யாகவே இருந்தது. ‘சமிக்ஞா அறக்கட்டளை’யின் நிர்வாகத்தின் கீழ் வந்தபோது, ‘தி எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி’யாகத் தீவிரப் பரிமாணத்தைப் பெற்றது. இந்த இதழை மேம்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்த ராம்மனோகர் ரெட்டி 2004-ல் இருந்து 2016 வரை ஆசிரியராக இருந்தார்.

உலகளவில், வெகுமக்கள் வாழ்விலும் கலாச்சாரத்திலும் அரசியலிலும் எதிர்காலத்தில் உருவாகப் போகும் பெரும் மாற்றங்களுக்குக் காரணமாக இருப்பவை சிறு இயக்கங்களும் சிற்றிதழ்களுமே. இந்தச் சிற்றிதழ்கள் குறைந்த ஆயுட்காலமே கொண்டவை. அதற்குப் பொருளாதாரக் காரணங்கள் மட்டுமல்ல; அறிவுபூர்வமான ஆரோக்கியமான சூழல் தொடர்ந்து இல்லாததும் காரணம்.

ஆனால், நாடு விடுதலை பெற்ற பிறகு தேசக் கட்டுமானம் சார்ந்து அறிவுஜீவிகள் விவாதித்துக்கொண்டிருந்தபோது, அதை இ.பி.டபிள்யூ. வெளிப்படுத்தியது. அடுத்தடுத்த காலகட்டத்தில் வெவ்வேறு துறைகளுக்கிடையில் வளர்ந்து வரும் சார்புகளையும் பிணைப்புகளையும் வெளிப்படுத்தும் கட்டுரையாளர்களின் கட்டுரைகளை வெளியிட்டது.

புதிய, வழக்கத்தில் இல்லாத, சம்பிரதாயத்துக்கு விரோதமான பார்வைகளையும் இ.பி.டபிள்யூ. வெளியிடத் தயங்கியதே இல்லை. எந்தப் பிரச்சினை குறித்தும் சுதந்திரமான, விமர்சனபூர்வமான கருத்துகளுக்கு எப்போதும் அதில் இடம் உண்டு. 1980-களில் பாலினம், ஆரோக்கியம், கல்வி, சுற்றுச்சூழல் தொடர்பான கட்டுரைகளும் வெளிவரத் தொடங்கின.

1970-களில் சாதி என்ற இந்தியச் சமூக யதார்த்தத்தை இந்தியக் கல்வித் துறை புரிந்துகொள்ள வேண்டுமென்பதை ஊக்குவித்த இதழ் இது.

சமீபத்தில் அரசியல் விஞ்ஞானியும் பேராசிரியருமான கோபால் குரு, இ.பி.டபிள்யூ.வின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். தெளிவான தகவல்கள், ஆழமான உள்ளடக்கத்தோடு கட்டுரைகள் வருவது வெகுஜன இதழியலில் அபூர்வமாகிவிட்ட நிலையில் தொடர்ந்த அறிவார்த்த விவாதங்களுக்கான களமாக இந்த இதழ் இன்றும் விளங்குகிறது.

பொருளாதாரம், அரசியல் விஞ்ஞானம், சமூகவியல், வரலாறு ஆகிய துறைகளில் ஒரு விவாதம் தொடங்குகிறதென்றால் அதன் மையமாக இ.பி.டபிள்யூ.வே இன்னமும் உள்ளது.

10chsrs_naavaa பேராசிரியர் நா. வானமாமலைright

தமிழில் வந்து போகும் ஆய்விதழ்கள்

# தமிழ் இலக்கியம், நாட்டுப்புறவியல் தொடர்பான ஆய்விதழ் கலாசாரம் 1969-ல் தமிழ் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் நா. வானமாமலையிலிருந்து தொடங்கியது. நாட்டுப்புறவியல் ஆய்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து அது பின்னர் கல்வித் துறையாக மாறுவதற்கு அவர் நடத்திய ‘ஆராய்ச்சி’ இதழ் பெரும் பங்களிப்பைச் செய்தது.

மானுடவியல், தொல்லியல், கல்வெட்டியல் ஆகியவற்றோடு வரலாற்றை எழுதுவதற்கு நாட்டார் வழக்காறுகளையும் ஒரு தரவாகப் பயன்படுத்த முடியும் என்பதை அவர் நிறுவினார். அவரை உத்வேகமாகக் கொண்டு ஆ. சிவசுப்ரமணியன், அ.கா. பெருமாள் ஆகியோர் அத்துறையில் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். 

# 1990-களில் பின் நவீனத்துவம், அமைப்பியல், பின் அமைப்பியல், நவமார்க்சியம் சார்ந்த கோட்பாடுகளை ஊக்குவித்த ஆய்விதழாக பாளையங்கோட்டையிலிருந்து ‘மேலும்’ ஆய்விதழ் வெளியானது.

# வெவ்வேறு உள்ளடக்கங்களில் சிறப்பிதழ்களைக் கொண்டு வெளிவந்த காத்திரமான ஆய்விதழ் ‘மாற்று வெளி’. 2009-ல் தொடங்கப்பட்ட இந்த இதழின் சிறப்பாசிரியர் பேராசிரியர் வீ. அரசு. அறிஞர் கால்டுவெல், இந்தியப் பொருளாதாரம், கல்வி, ரோஜா முத்தையா நூலகம், நாவல்கள், மாற்றுப் பாலியல், தமிழ்ச் சமூக வரலாறு, போருக்குப் பிந்தைய ஈழம், தமிழ் காமிக்ஸ் உள்ளிட்டத் தலைப்புகளில் 15 இதழ்கள் வெளிவந்து சமீபத்தில் நின்றுபோனது. 

# சமூக அறிவியல்களுக்காக வெளியாகும் ஒரே இதழான ‘சமூக விஞ்ஞானம்’ 2003-ம் ஆண்டிலிருந்து தென்னக ஆய்வு மையத்தால் வெளியிடப்படுகிறது. இதன் ஆசிரியர் தேவ. பேரின்பன் காலமான பிறகு தற்போது ஆசிரியராக மே.து.ராசுகுமார் உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in