

சென்னை: மருத்துவ மாணவர்களின் பயிற்சியை மேம்படுத்த நவீன ஆய்வகம் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படவுள்ளது என்று அதன் துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி கூறியதாவது: எம்பிபிஎஸ் படிப்பை நான்கரை ஆண்டுகள் படித்து முடிக்கும் மாணவர்கள், ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்றுகின்றனர். அந்த ஓராண்டு காலத்தில் ஊசி போடுவது முதல் பல்வேறு சிகிச்சைகளுக்கு பயிற்சி எடுத்து கொள்கின்றனர்.
இந்த பயிற்சி மட்டும் போதாது என்பதால், பல்வேறு வகையான சிகிச்சை முறைகளுக்கு பயிற்சி பெறும் வகையில், ‘மெய்நிகர் சிமுலேஷன்’ ஆய்வகம் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகத்தை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையமும் அறிவுறுத்தியுள்ளது. ஆய்வகத்தில் பயிற்சி பெறும் மருத்துவமாணவர்கள், நேரடியாக நோயாளிகளுக்கே சிகிச்சை அளிப்பதை போன்ற உணர்வு ஏற்படும். குறிப்பாக, ஊசி போட்டு, போட்டு பழகி, 100 சதவீதம் நம்பகத்தன்மை வந்தவுடன், நோயாளிக்கு போட அனுமதிக்கப்படுவர்.
இதுபோன்ற, பல்வேறு வகையான சிகிச்சை முறைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளையும் ‘சிமுலேஷன்’ ஆய்வகத்தில் பயிற்சி பெற முடியும். இந்தஆய்வகத்தை விரைவில் அமைக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பிரதான மருத்துவ கல்லுாரிகளிலும் ஆய்வகம் அமைக்கப்படும் என்றார்.