

சென்னை: பிரான்ஸ் நிறுவனம் மற்றும் சென்னை ஐஐடியின் கூட்டு முயற்சியில் ரூ.900 கோடி செலவில் புத்தொழில் மேம்பாட்டு மையம்அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
விமான போக்குவரத்து, விண்வெளி, பாதுகாப்பு தொழில்நுட்பத் துறையில் ஸ்டார்ட்-அப் எனப்படும்புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் சென்னை ஐஐடி-யும் ஸ்டார்ட்பர்ஸ்ட் ஏரோஸ்பேஸ் என்ற பிரான்ஸ் நிறுவனமும் இணைந்து சென்னையில் புத்தொழில் மேம்பாட்டு மையத்தை நிறுவுகின்றன. இதற்கு ஏறத்தாழ ரூ.900 கோடி நிதியுதவியை ஸ்டார்ட்பர்ஸ்ட் நிறுவனம் அளிக்கிறது.
சென்னை ஐஐடியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐஐடி சார்பில் அதன் இயக்குநர் வீ.காமகோடி, டீன் (ஐசிஎஸ்ஆர்) மனு சந்தானம் ஆகியோரும், ஸ்டார்ட்பர்ஸ்ட் ஏரோஸ்பேஸ் சார்பில் அதன் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் பிரான்சிஸ் சோப்பார்ட், இயக்குநர் (கூட்டு முயற்சி) செட்ரிக் வேலட் ஆகியோர் ஒப்பந்த ஆவணங்களைபரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.
இதன்மூலம் இந்தியாவில் விமானப் போக்குவரத்து, விண்வெளி, பாதுகாப்பு தொழில்நுட்பத் துறைமேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இதுகுறித்து ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும்போது, ``இந்தியா பொருளாதார பலமிக்க நாடாக உருவாக வேண்டுமானால் இளம்தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம்.அந்த வகையில், புதிய தொழில்நுட்பத் துறையில் ஸ்டார்ட்-அப்தொழில் நிறுவனங்களை உருவாக்குவதற்கு இந்த கூட்டு முயற்சி உதவும்'' என்றார்