

மதுரை: பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தமிழ்ப்பாட வினாத்தாளில் ‘எண்ணியிருந்த’ என்பதற்குப் பதில் ‘பண்ணியிருந்த’ என்று எழுத்துப்பிழையுடன் இருந்ததால் அந்த வினாவுக்கு விடையளிப்பதில் மாணவர்கள் சற்று தடுமாற்றம் அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மார்ச் 28-ம் தேதி ஆங்கிலப் பாடத்தேர்வு, ஏப்.1-ம் தேதி கணிதம், ஏப்.4-ம் தேதி அறிவியல், ஏப்.6-ம் தேதி விருப்ப மொழிப்பாடம், ஏப்.8-ம் தேதி சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் நடைபெறுகிறது.
இன்றைய தமிழ் மொழிப் பாடத்தேர்வு மிகவும் எளிதாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதில், பகுதி 111-ல் பிரிவு 2-ல் எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும் என்ற பகுதியில் 33-வது வினாவில், “நெடுநாளாகப் பார்க்க பண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வந்தால் அவரை விருந்தோம்பல் செய்வதைக் குறித்து எழுதுக” என்று வினா உள்ளது.
இதில் ‘எண்ணியிருந்த’ என்பதற்குப் பதிலாக தவறுதலாக ‘பண்ணியிருந்த’ அதாவது ‘எ’ என்ற எழுத்துப்பதிலாக தவறுதலாக ‘ப’ என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது. இதனால் மாணவர்கள் அந்த வினாவுக்கு விடையளிக்கலாமா வேண்டாமா என்று சற்று தடுமாற்றம் அடைந்தனர்.
எழுத்துப்பிழையாய் உள்ளது என அறிந்த மாணவர்கள் அந்த வினாவுக்கு விடையளித்துள்ளனர். இனி வரும் காலங்களிலாவது எழுத்துப்பிழையின்றி வினாத்தாள் தயாரிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழாசிரியரும், தமிழகத் தமிழாசிரியர் கழக முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளருமான நீ.இளங்கோ கூறியதாவது: “பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாட தேர்வு வினாக்கள் எளிதாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினர். ஒரு மதிப்பெண் வினா மாணவர்களுக்கு நடுநிலையோடு கேட்கப்பட்டிருந்தது.
பாடப்புத்தகங்களிலிருந்து மிகுதியான வினாக்கள் அதிகம் உள்ளன. எதிர்காலத்தில் போட்டித்தேர்வு சந்திக்கும் வகையில் எளிமையான வினாக்களாக இருந்தது. மற்ற சராசரி மாணவர்கள் தேர்ச்சிபெறலாம். நன்றாக படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கும் வகையில் இருந்தது.
இதில் 24 வது வினா பகுபத உறுப்பிலக்கணம் பகுதியில் இலக்கணம் தெரிந்தவர்களால் மட்டுமே எழுதும் வகையில் கொஞ்சம் கடினமாக கேட்கப்பட்டிருந்தது.
வினா 33ல் (3 மதிப்பெண்) “நெடுநாளாகப் பார்க்க பண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வந்தால் அவரை விருந்தோம்பல் செய்வதைக் குறித்து எழுதுக” என்பதில் எண்ணியிருந்த என்பதற்குப்பதிலாக பண்ணியிருந்த என தவறாக வந்துள்ளது. இதுபோன்ற எழுத்துப்பிழைகளை இனிவரும் காலங்களில் வராமல் அரசு கண்காணிக்க வேண்டும்” என்றார்.