திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்: கவனமாக செயல்பட யுஜிசி எச்சரிக்கை

திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்: கவனமாக செயல்பட யுஜிசி எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை: திறந்தநிலை மற்றும் இணையவழி படிப்புகளில் சேரும் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை வழிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு விவரம்: நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் தொலைதூர மற்றும் இணையவழி படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, திறந்தநிலை, இணையவழி படிப்புகளை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகார நிலையை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், அனுமதிக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட படிப்புகளின் விவரங்கள் https://deb.ugc.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

இதுதவிர பொறியியல், மருத்துவம், பிசியோதெரபி, பார்மஸி, நர்சிங், பல் மருத்துவம், கட்டிடக் கலை, சட்டம், விவசாயம், தோட்டக்கலை, ஹோட்டல் மேலாண்மை, உணவு தொழில்நுட்பம், சமையல் அறிவியல், விமான பராமரிப்பு, காட்சிக்கலை, விளையாட்டு, விமானம் ஆகிய உயர்கல்வி துறைகளில் திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி, இணையவழி கல்வியை வழங்க அனுமதி வழங்கப்படவில்லை.

அதேபோல், அனைத்து துறைகளிலும் முனைவர் மற்றும் ஆராய்ச்சி படிப்பை தொலைதூர கற்றல் மற்றும் இணைய வழிக் கல்வி முறையில் பெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் ஆராய்ந்து மாணவர்கள் படிப்புகளில் சேர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, நடப்பாண்டு திறந்தநிலை, இணையவழி கல்விக்கான சேர்க்கையை உயர்கல்வி நிறுவனங்கள் வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in